புதுச்சேரி: கொரோனா தொற்று பரவலை பொறுத்து அந்தந்த மாநிலங்கள் அவர்களுக்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கலாம். முககவசம் கட்டாயமில்லை என்று ஆயுஷ் மற்றும் சுகாதாரத்துறை ஒன்றிய இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் கூறினார். சர்வதேச யோகா தினவிழா வரும் ஜூன் 21ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதன் 25 நாள் முன்னோட்ட நிகழ்ச்சி மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் இன்று காலை நடந்தது. ஆயுஷ் மற்றும் சுகாதாரத்துறை ஒன்றிய இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் தொடங்கி வைத்தார். கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இதைத் தொடர்ந்து யோகாசன கூட்டு பயிற்சியில் கலந்து கொண்டனர்.
பின்னர் பிரதாப் ராவ் ஜாதவ் நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா பரவல் தடுப்பிற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய அரசு செய்துள்ளது. மேலும் தற்போதைய சூழ்நிலையில் முகக்கவசம் கட்டாயமில்லை. கொரோனா தொற்றை பொறுத்து அந்தந்த மாநிலங்களும் அவர்களது மாநிலத்துக்கு ஏற்ப பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து கொள்ளலாம் என்றார்.