அகமத்நகர்: மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மகாந்த் ராம்கிரி மகாராஜ் சாமியார் இஸ்லாமை பற்றியும் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் விதமாகவும் பேசியதாக மகாராஷ்டிராவில் உள்ள பல போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரை கைது செய்யக் கோரி முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர். ராம்கிரி மகாராஜ்க்கு ஆதரவாக அகமத்நகரில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய எம்எல்ஏ நிதேஷ் ராணே, ராம்கிரி மகாராஜ்க்கு எதிராக யாராவது பேசினால் மசூதிக்குள் நுழைந்து ஒவ்வொருவரையும் அடித்து உதைப்போம் என்று பேசினார்.
அவருடைய பேச்சுக்கள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. இதை தொடர்ந்து அகமத்நகர் மாவட்டம், ஸ்ரீராம்பூர் மற்றும் டோப்கானா போலீசார் ரானேவுக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஏஐஎம்ஐஎம் கட்சியின் தேசிய ஊடக தொடர்பாளர் வாரிஸ் பதான் எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில்,முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பூட்டும் பேச்சுக்களை ரானே பேசி வருகிறார். எனவே, மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் பட்னாவிஸ் ஆகியோர் ரானே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.