மாசிமகம் தமிழகத்தின் பல்வேறு திருத்தலங்களில் மிகச் சிறப் பாகக் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலான கோயில்களில் மாசிமகத்தை ஒட்டி தெப்போற்சவம் மிகச் சிறப்பாக நடக்கும். சகல பாவங்களையும் தீர்க்கும் மாசி மாத விழாக்கள் நடக்கும் கோயில்களில் திருக்கோட்டியூர் திருத் தலத்திற்கு ஒரு சிறப்பான இடம் உண்டு. 108 திருத்தலங்களில் ஒன்றான திருத்தலம் திருக்கோட்டியூர்.
காசின் வாய்க் கரம் விற்கிலும்
கரவாது மாற்று இலி சோறு இட்டுத்
தேசவார்த்தை படைக்கும் வண்
கையினார்கள் வாழ் திருக்கோட்டியூர்
– என்பது பெரியாழ்வார் பாசுரம்.
அதாவது திருக்கோட்டியூரில் வாழ்பவர்கள் ஒரு பொற்காசுக்கு ஒரு பிடி நெல் விற்கும் பஞ்ச காலத்திலும் தம் பொருள்களை மறைத்து வைக்காமல் எந்தவித பிரதி பயனையும் எதிர்பாராமல் விருந்தினர்க்கு உணவு அளித்து உபசரிப்பார்களாம். இத்தனை சிறப்பு வாய்ந்த பாண்டிய நாட்டு திவ்ய தேசமான திருக்கோட்டியூர் திருத்தலத்தை நாம் தரிசிப்போம்.
பெயர்க் காரணம்
பகவானின் தசாவதாரங்களில் நரசிம்ம அவதாரத்தோடு தொடர்புடைய தலம் இது. இரணியன், இரணியாட்சன் என்று இரண்டு அசுரர்கள் இருந்தனர். அவர்கள் அண்ணன் தம்பிகள். இரணியாட்சனை வராக அவதாரம் எடுத்து திருமால் வதம் செய்தார். தன் தம்பியைக் கொன்ற திருமாலை பழிவாங்க தவம் செய்தான்இரணியன். பிரம்மனைக் குறித்து தவமிருந்த இரண்யன், தனக்கு தேவர்களாலும், மனிதர் களாலும், விலங்குகளாலும், உலகில் எந்த ஆயுதத்தாலும் மரணம் நேரக்கூடாது என்று வரம் பெற்றான்.
அந்த வரத்தின்பலத்தினால் தேவர்களை மட்டுமல்லாது ரிஷிகளையும் மக்களையும் துன்புறுத்தினான். உலகெங்கும் தன்னுடைய நாமமே சொல்ல வேண்டும் என்று கட்டளையிட்டான். இரண்யனின் துன்பத்தைப் பொறுக்காத தேவர்கள் அனைவரும் பாற்கடலுக்குச் சென்று பகவானிடம் தங்கள் குறைகளைச் சொல்ல, “சற்று பொறுங்கள்; ஆவன செய்யலாம்” என்று பகவான் அவர்களுக்கு உறுதி அளித்தார். இதற்கிடையே தேவர்கள் அனைவரும் இரணிய வதத்திற்கு ஆலோசனை செய்ய இரணியன் வராத ஒரு இடத்தைத் தேடினர்.
அப்போது நான்முகன், “பூவுலகில் ஸ்ரீமந் நாராயணனை பாற்கடல் பரந்தாமனாகக் காண வேண்டுமென்று ‘‘கதம்பரிஷி” கடுந் தவம் புரிகிறார். நாராயண மந்திரம் ஒலித்துக்கொண்டிருக்கும் அந்த ஆஸ்ரமம் தான் இரண்யாதிக்கம் செல்லாத இடம்” என்று கூற, தேவர்கள் அனைவரும் கதம்பரிஷியின் ஆஸ்ரமத்திற்கு வந்து கூடினர். தேவர்களும், சப்த ரிஷிகளும் கூட்டமாய் இவ்விடத்திற்கு (கோஷ்டி கோஷ்டியாய்) வந்தமையால் திருக்கோஷ்டியூர்(கோஷ்டிபுரம்) ஆயிற்று.
திருக்கோட்டியூரும்
திருக்கோட்டியூர் நம்பிகளும் இத்தலத்தின் சிறப்புக்கு இன்னும் ஒரு காரணம் இங்கே அவதரித்த ராமானுஜரின் குரு திருக்கோஷ்டியூர் நம்பி. இவர் திருக்குருகைப்பிரான் என்கிற திருநாமத்துடன் இந்த அழகான திவ்யதேசத்தில் அவதரித்தார். ஆளவந்தாருடைய முக்கியமான சிஷ்யர்களுள் இவரும் ஒருவர். இவர் பிற்காலத்தில் இத்தலத்தின் பெயரோடு திருக்கோஷ்டியூர் நம்பி என்றே அழைக்கப்பட்டார். இவருக்கு கோஷ்டி பூர்ணர், கோஷ்டி புரீசர் என்ற திருநாமங்களும் உண்டு.
ஆளவந்தார் தன்னுடைய சிஷ்யர்களுள் 5 பிரதானமான சிஷ்யர்களை அழைத்து, எம்பெருமானாருக்கு ஸம்பிரதாயத்தில் உள்ள சகல அர்த்த விசேஷங்களையும் கற்றுக்கொடுக்குமாறு நியமித்தார். அந்த 5 பேரில், ரஹஸ்ய த்ரயத்தினுடைய (திருமந்த்ரம், த்வயம், சரமஸ்லோகம்) அர்த்த விசேஷங்களைக் கற்றுகொடுக்குமாறுதிருக்கோஷ்டியூர் நம்பியை நியமித்தார்.
ஆனால் ஸ்ரீ ராமானுஜருக்கு அவ்வளவு எளிதாக இந்த அர்த்தங்களை எல்லாம் திருக்கோட்டியூர் நம்பிகள் சொல்லிவிடவில்லை. ஸ்ரீரங்கத்திற்கும் திருக்கோட்டியூருக்கும் 18 முறை நடந்து, 18-வது முறைதான் மந்திரத்தின் பொருளை முறையாக நம்பிகளிடம் இருந்து பெற்றார். ஆனால், எம்பெருமானார் பரம கருணையுடன் தன்னைத்தேடி ஆசையுடன் கேட்க வந்த வைணவர்களுக்கு திருக்கோட்டியூர் கோயிலின் ஒரு பகுதியில் மந்திரத்தின் பொருளை விரித்துரைத்தார். குருவின் வார்த்தையை மீறி இந்தச் செயலை ராமானுஜர் செய்தாலும் அவருடைய உள்ளத்தை அறிந்த திருக்கோட்டியூர் நம்பிகள் அவருக்கு எம்பெருமானார் என்ற பட்டத்தைத் தந்தார்.
ராமானுஜர் திருக்கோட்டியூர் நம்பிகளை சேவிக்கும் வரையில் அவருடைய பெருமை அந்த ஊர்க்காரர்களுக்கு தெரியாமல் இருந்தது. ராமானுஜர் முதல் முறையாக நம்பியைச் சந்திக்க திருக்கோட்டியூர் வந்தவுடன் அவருடைய திருமாளிகை எங்கு உள்ளது என்று அந்த ஊரில் இருக்கும் சிலரிடம் கேட்டார். அவர்கள் அதோ அந்தத் திசையில் உள்ளது என்று காட்டியவுடன், ராமானுஜர் அவர் நின்ற இடத்திலிருந்தே அந்த திசையை நோக்கி சேவித்துக் கொண்டே நம்பியினுடைய திரு மாளிகையை அடைந்தார். இதைப் பார்த்த பிறகு தான் அங்குள்ள ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு நம்பியினுடைய பெருமை புரிந்தது.
ஆலய அமைப்பு
ஓம் நமோ நாராயணாய எனும் மூன்று சொற்களை உணர்த்தும் விதமாக இக்கோயிலின் அஷ்டாங்க விமானம் மூன்று தளங்களாக அமைந்துள்ளது.அஷ்டாங்க விமானத்தின் வட பகுதியை மயனும், தென்பகுதியை விஸ்வ கர்மாகவும் அமைத்தனர். விஸ்வ கர்மாவால் செய்யப்பட்ட பாகத்தில் இரண்யனைப் பிடித்துக் கொண்ட நரசிம்ம உருவமும், மயனால் செய்யப்பட்ட பகுதியில் இரண்யனைக் கொன்ற நரசிம்ம உருவமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நரசிம்மமூர்த்திகள் காண்போரை பிரமிக்கச்செய்யும் தோற்றமுள்ளவை.
விமானத்தின் கீழ்தளத்தில் நர்த்தன கிருஷ்ணர் (பூலோக பெருமாள்), முதல் தளத்தில் ஆதிசேஷன் மீது சயனகோலத்தில் சவுமியநாராயணர் (திருப்பாற்கடல்பெருமாள்), இரண்டாவது அடுக்கில் நின்றகோலத்தில் உபேந்திர நாராயணர் (தேவலோகப் பெருமாள்), மூன்றாம் அடுக்கில் அமர்ந்த கோலத்தில் பரமபதநாதர் (வைகுண்டப்பெருமாள்) என சுவாமி நான்கு நிலைகளில் அருளுகிறார்.
கோயிலின் அடித்தளத்தில்தான் பெருமாளின் சயனத் திருக்கோலம். உரகமெல்லணையான் என்ற பெயரோடு அறிதுயிலில் காட்சி தருகிறார். ஒரு சிறு கோயிலில் சிவபிரான் எழுந்தருளியிருக்கிறார். இவரை வலம் வந்தே நாம் கோயிலில் பிரதான மண்டபத்தில் நுழைகிறோம். அங்கு நம் கண்முன் நிற்பவர் நர்த்தன கிருஷ்ணன். காளிங்க நர்த்தனனாக நிற்கிறார்.
இனி, கோயிலின் முதல் தளத்தில் ஏறி அங்கு துயில் கொள்ளும் உரகமெல்லணையானைக் காணலாம்.
இப்பள்ளி கொண்டானின் தலை மாட்டிலே தான் கதம்ப மகரிஷி தவக்கோலத்தில் இருக்கிறார். மேலும், படியேறி இரண்டாவது தளம் சென்றால் அங்கே நின்ற கோலத்தில் சௌமிய நாராயணன் இருக்கிறார். அதற்கும் அடுத்த மூன்றாவது தளத்தில்தான் இருந்த கோலத்தில் ஸ்திதநாராயண வைகுண்ட நாதன் கோயில் கொண்டிருக்கிறான், எல்லோரும் சுதையாலான வடிவங்களே. கோயிலின் தென்புறத்திலே இரணியனோடு யுத்தஞ் செய்யும் மூர்த்தியும் வடபுறத்திலே இரணியனை வதம் புரியும் நரசிம்மரும் சிலை உருவில் இருக்கிறார்கள். இவர்களை தக்ஷிணேசுவரன், வடவேசுவரன் (தெற்காழ்வான், வடக்காழ்வான்) என்று அழைக்கிறார்கள்.
பிரதான கோயிலின் தென் பகுதியிலேதான் தாயார் சந்நிதி இருக்கிறது. தாயாரைத் “திருமாமகள்” என்கிறார்கள். அஷ்டாங்க விமானத்தின் வடபக்கத்தில் நரசிம்மருக்கு அருகில் ராகு, கேது உள்ளனர்.மற்ற ஸ்தலங்களில் உள்ளதைப்போன்று பஞ்ச லோகங்களால் அமையாது, தூய வெள்ளியில் உற்சவருக்கு விக்ரகமிருப்பது இன்னொரு சிறப்பாகும் இக்கோயிலில் நிறையக் கல்வெட்டுகள் உண்டு. ராஜராஜசோழனது கல்வெட்டில், இக் கோயிலிலுள்ள சிவனைத் திருமயான தேவன் என்று குறிப்பிட்டிருக்கிறது.
முதல் குலோத்துங்கள் காலத்தியக் கல்வெட்டு ஒன்றும், கீழைத் திருதலையில் இருக்கும் உரகமெல்லணையான் கோயிலில் நந்தா விளக்கு எரிப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட நிபந்தமும் காணப்படுகின்றன. திருமயத்தில் உள்ள கல்வெட்டின்படி ஒன்றும் இங்கிருக்கிறது. அதன்படி நாராயண ஸ்ரீ குமாரபட்டர் என்பவர் இரண்டு கோவில்களுக்கும் உள்ள வழக்கை எப்படித் தீர்த்து வைத்தார் என்பதும் தெரிகிறது. இந்தப் பஞ்சாயத்துக்கு ஹொய்சல வீரசோமேசவரனின் பிரதிநிதி தலைமை வகித்தான் என்றும் அறிகிறோம். இந்தக் கல்வெட்டு சுந்தர பாண்டியனின் காலத்தியது.
இத்தலத்தை பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கின்றனர். மதுரையில் திருப்பல்லாண்டு பாடிவிட்டு திருக்கோட்டியூர் வந்த பெரியாழ்வார் இங்கிருந்துதான்பிள்ளைத் தமிழைப்பாடத் தொடங்குகிறார்.கோட்டியூர் நந்தகோபன் மாளிகையாகவும், அங்குள்ள கோகுலம் ஆய்ப்பாடியாகவும், கோயிலில் உள்ள நர்த்தனமூர்த்தி கண்ணனாகவும் காட்சி கொடுத்திருக்கின்றனர். அப்படி அவர் பெற்ற அனுபவத்தில்தான்,
வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் தூவிடக்
கண்ணன் முற்றம் கலந்து அன்று ஆயிற்றே
– என்று தொடங்கும் பாடல்களைப் பாடி மகிழ்ந்திருக்கிறார்.
மாசி மகம்
இங்கு நடக்கும் விழாக்களில் முக்கியமான விழாக்கள் மாசியில் தெப்பத் திருவிழா.நவகிரகங்களில் ஒருவர் புதன் பகவான். நமக்கு புத்தியில் தெளிவையும் திடத்தையும் வீரியத்தையும் கொடுப்பவர் இவர். இவரின் மைந்தன் புரூரவன், மகா சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தார்.புருரூப சக்கரவர்த்திஇத்தலத்தை திருப்பணி செய்தபோது மகாமகம் பண்டிகை வந்தது. அப்போது பெருமாளை தரிசிக்க விரும்பினார் புருரூவன். அவருக்காக இத்தலத்தில் ஈசான்ய (வடகிழக்கு) திசையில் உள்ள கிணற்றில் கங்கை பொங்க, அதன் மத்தியில் பெருமாள் காட்சி தந்தார். பிரகாரத்தில் உள்ள இந்தக் கிணற்றை ‘மகாமக கிணறு’ என்றே அழைக்கிறார்கள். மகாமக விழாவின்போது, சௌமியநாராயணர் கருடன் மீது எழுந்தருளி இங்கு தீர்த்தவாரி செய்கிறார்.
திருக்கோட்டியூர் தெப்ப உற்சவம் இந்த ஆண்டு மார்ச் மூன்றாம் தேதி திங்கட்கிழமை கொடியேற்றத்தோடு தொடங்கும். ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் பெருமாள் உபய நாச்சிமார்களோடு வெவ்வேறு வாகனங்களில் திருவீதி வலம் வருவார். மார்ச் மாதம் ஆறாம் தேதி வியாழக்கிழமை இரவு கருட சேவை உற்சவம் நடைபெறும். மார்ச் மாதம் எட்டாம் தேதி இரவு ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல் நடைபெறும்.
ஒன்பதாம் தேதி ஞாயிற்றுக்கிழமை சூர்ண அபிஷேகமும், பதினோராம் தேதி செவ்வாய்க்கிழமை வெண்ணெய்த்தாழி சேவையும் நடைபெறும், மார்ச் மாதம் 12-ஆம் தேதி மாசி மகம் அன்று தெப்பத் திருவிழா நடைபெறும் ,அன்று காலை தங்க தோளுக்கினியானில் திருவீதி புறப்பாடு கண்டருளும் பெருமாள், மாலை ஏழு முப்பது மணி அளவில் தெப்பத்தில் உற்சவம் கண்டருள்வார். மார்ச் 13 ஆம் தேதி வியாழன் அன்று காலை தீர்த்தவாரி நடைபெறும்.
வரந்தரும் விளக்கு எடுக்கும் விழா
மாசிமகத்தில் மற்றுமொரு சிறப்பு திருக்குளத்தில், பக்தர்களால் ஏற்றப்படும் விளக்கு. ஆண்டுதோறும் இந்த திருத்தலத்தில் மாசி மாத மக நட்சத்திர நாளின் பவுர்ணமி திதி முடிவுறும் நேரத்தில், இரவு ‘தெப்ப விளக்குத் திருவிழா’ எனும் ‘வரந்தரும் விளக்கு எடுக்கும் விழா’ கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின்போது பெருமாளும், தாயாரும் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி தருவார்கள். அந்த நேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் குளக்கரையில் மண் அகல்விளக்கு தீபமேற்றி வழிபாடு செய்வார்கள். இது சிறப்பான விளக்குப் பிரார்த்தனை பரிகாரமாகக் கூறப்படுகிறது.
பிரார்த்தனை செய்பவர்கள், ஒரு அகல்விளக்கை ஆலயத்தில் வாங்கி, வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். பின்னர் அந்த விளக்கில் ஒரு ரூபாய் காசும், துளசியும் போட்டு சிறுபெட்டியில் வைத்து மூடி பூஜை அறையில் வைத்து விடுகின்றனர். இந்த விளக்கில் திருக்கோஷ்டியூர் பெருமாள் எழுந்தருளியிருப்பதாக ஐதீகம்.
திருக்குளத்தில் விளக்கிட்டு வழிபட்டால், குலம் தழைக்கும் நினைத்தது நிறைவேறும். பக்தர்கள் தங்களின் குறைகள் நிறைவேறுவதற்காக, குளக்கரையில் விளக்கேற்றி வழிபடுவார்கள். அந்த விளக்குகளை எடுத்து வந்து, வீட்டில் தினமும் தீபாராதனை காட்டி, நைவேத்தியம் செய்து வழிபட்டுவந்தால், ஒளிமயமான எதிர்காலம் உறுதி. பிரார்த்தனை நிறைவேறியவர்கள், அடுத்த ஆண்டு மாசி மகத்தன்று இரவு, இத்தல குளக்கரையில் நடைபெறும் தெப்ப விளக்குத் திருவிழாவின்போது தாங்கள் வீட்டில் வைத்து வழிபட்ட அகல்விளக்குடன் மற்றொரு விளக்கில் தீபமேற்றி தெப்பக் குளக்கரையில் வைத்து வழிபடுகின்றனர்.
* எங்கே இருக்கிறது?
} திருப்பத்தூரிலிருந்து சிவகங்கை செல்லும் பேருந்துகள் யாவும் திருக்கோட்டியூர் வழியாகத்தான் செல்ல வேண்டும். கோயிலின் வாசலிலேயே பேருந்துகள் நிற்கும். காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் செல்லாமல் திருக்கோஷ்டியூர் செல்லும் பேருந்தும் உள்ளது.
} மூலவர்: உரக மெல்லணையான் (திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட ஷீராப்தி நாதன்) புஜங்க சயனம், கிழக்கே திருமுக மண்டலம் (பன்னக மருதுசாயி என்றும் பெயர்).
} உற்சவர்: சௌம்ய நாராயணன், நின்ற திருக்கோலம்.தாயார்: திருமாமகள் நாச்சியார்.
}தீர்த்தம்: தேவபுஷ்கரணி (திருப்பாற்கடல்).
} விமானம்: அஷ்டாங்க விமானம்
} காட்சி கண்டவர்கள்: பிரம்மா,
தேவர்கள், கதம்ப முனி.
திறந்திருக்கும் நேரம்: காலை 6:00 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4:00 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும். சுவாமிக்கு நெய்தீபம் ஏற்றி நேர்த்திக் கடன் செலுத்தலாம்.
முனைவர் ஸ்ரீராம்