திருவனந்தபுரம்: 1989ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆலப்புழா தொகுதியில் தபால் ஓட்டுகளில் மோசடி செய்தோம் என்று மார்க்சிஸ்ட் தலைவரான முன்னாள் அமைச்சர் சுதாகரன் கூறியது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கேரள தலைமை தேர்தல் அதிகாரி ரத்தன் யு. கேல்கர் உத்தரவிட்டுள்ளார். கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஜி. சுதாகரன். கடந்த வி.எஸ். அச்சுதானந்தன் மந்திரிசபையில் இவர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார்.
இந்நிலையில் சுதாகரன் நேற்று ஆலப்புழாவில் நடந்த என்ஜிஓ சங்க கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியது: 1989ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் சார்பில் தேவதாஸ் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் கிடைத்த தபால் ஓட்டுகளை பிரித்து நாங்கள் திருத்தினோம். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் என் மீது நடவடிக்கை எடுத்தாலும் எனக்கு கவலை இல்லை. இவ்வாறு அவர் பேசினார். சுதாகரனின் இந்தப் பேச்சு கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க ஆலப்புழா மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு கேரள தலைமை தேர்தல் அதிகாரி ரத்தன் யு. கேல்கர் உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவில் கூறியிருப்பது: தபால் ஓட்டுகளை பிரித்து திருத்தியதாக ஊடகங்களில் வெளியான தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் தீவிர விசாரணை நடத்த தீர்மானித்துள்ளது. தபால் ஓட்டுக்களை பிரித்து திருத்துவது 1951ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 136 மற்றும் 128 பிரிவுகள் மற்றும் 1961ம் ஆண்டு தேர்தல் நடைமுறை சட்டம், பிஎன்எஸ் ஆகியவையின் படி தண்டனைக்குரிய குற்றங்களாகும். இது தொடர்பாக ஆலப்புழா மாவட்ட தேர்தல் அதிகாரி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தபால் ஓட்டுகளில் மோசடி செய்தபோதிலும் அந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வக்கம் புருஷோத்தமன் 25 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.