சென்னை: தமிழ்நாட்டில் ‘முருகனை’ மையப்படுத்தி கலகங்களை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை தாக்கிய இந்து முன்னணியினரை கைது செய்ய வேண்டும் என கம்யூனிஸ்ட் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): திண்டுக்கல் மாவட்டம் தாடி கொம்பு பகுதியில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரசார கூட்டத்தில் புகுந்து, இந்து முன்னணியை சேர்ந்த கும்பல் பேசுவதை நிறுத்தும்படி கூறி சரத்குமார், பாக்கியம், சண்முகவேல் ஆகியோர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியினரும், பொதுமக்களும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக திரண்ட, நிலையில் காவல்துறை தலையிட்டு அமைதி திரும்ப நடவடிக்கை எடுத்தது.
இந்து முன்னணி கும்பல் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு, வன் செயல்களில் ஈடுபட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த வன்முறை நடவடிக்கை தொடருமானால், அதனை, எதிர்கொள்ள கம்யூனிஸ்ட்களும் களம் இறங்குவார்கள் என எச்சரிக்கிறோம். வடமாநிலங்களில் ராமரை பயன்படுத்தியது போல, இங்கு, தமிழ்நாட்டில் ‘முருகனை’ மையப்படுத்தி கலகங்களை ஏற்படுத்தி, அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலுக்கான அரசியல் சதியை, திண்டுக்கல் சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது. இதனை ஆரம்ப நிலையிலேயே இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். திண்டுக்கல் வன்முறையில் ஈடுபட்ட. இந்து முன்னணி கும்பலை சேர்ந்த அனைவரையும் கைது செய்து தண்டிக்க வேண்டும்.
பெ.சண்முகம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): திண்டுக்கல் தாடிக்கொம்பில் நடந்த பிரசார கூட்டத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் இந்து முன்னணி மற்றும் பாஜவினர் திட்டமிட்ட வன்முறையில் இறங்கி கோரத்தாண்டவம் ஆடியுள்ளனர். ஆனால், உண்மைகளை மறைத்து திசை திருப்பும் வகையில் இந்து முன்னணியின் மாநில செயலாளர் வி.எஸ்.செந்தில்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை பயங்கரவாதிகள் என்று கூறியுள்ளார். உண்மையில், நாடு முழுவதும் பயங்கரவாதத்தை நிகழ்த்தி மதவெறி வெறுப்பு அரசியலை வளர்த்து வருவது யார் என்பதை மக்கள் நன்கறிவார்கள்.
மதவெறி அரசியலை முன்னெடுத்து சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை மேற்கொண்டு தமிழ்நாட்டை அமளிக்காடாக மாற்ற முயல்கிறார்கள். மாறாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைதியையும், நல்லிணக்கத்தையும் நிலைநிறுத்தவே போராடி வருகிறது. எனவே, வன்முறையில் ஈடுபட்ட இந்து முன்னணி மற்றும் பாஜவினர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.