பந்தலூர்: கூடலூர் அருகே புளியம்பாறை கிராமத்திலிருந்து ஆமைக்குளம் அரசு கல்லூரிக்கு செல்லும் பாதையில் உள்ள நாரங்காகடவு ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் வனத்துறையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் நேற்று நாடுகாணி பஜாரில் ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புளியம்பாறை பழங்குடியின கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் இருந்து ஆமைக்குளம் அரசு கல்லூரிக்கு செல்லக்கூடிய பாதையில் அமைந்துள்ள நாரங்காகடவு ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்து தர வேண்டுமென இப்பகுதி பழங்குடியின மக்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
குறிப்பாக பழங்குடியின கிராமத்திலிருந்து பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு ஆற்றை கடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.மக்கள் கோரிக்கையின் காரணமாக சாலையின் குறுக்கே பாலம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் வனத்துறையினர் கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தி வருகின்றனர்.
இதனால், பாலம் அமைக்க தடையில்லா சான்று வழங்க கோரி கூடலூரில் இருந்து கேரளா மாநிலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள நாடுகாணி பஜார் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி பேரணியாக சென்று நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிகழ்விற்கு மாவட்ட குழு உறுப்பினர் ரமேஷ் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் குஞ்சுமுகம்மது, சுரேஷ், ராசி ரவிக்குமார், மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கொட்டும் மழையிலும் குடை பிடித்தவாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நாடுகாணி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.