‘‘சார்பதிவாளர் அலுவலகத்திற்கு போலி ஆவணங்கள் மீண்டும் பதிவுக்கு வந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்காமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டம், காட்டுப்பாடி ஏரியாவுல, பத்திரங்களை பதிவு செய்ற பதிவாளர் அலுவலகம் இயங்கி வருது.. இந்த அலுவலகத்துல ஏற்கனவே போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலங்களை தனியாருக்கு பதிவு செய்து கொடுத்தது வெளிச்சத்துக்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்துச்சு.. இந்த நிலையில சில நாட்களுக்கு முன்னாடி காட்டுப்பாடி சார் பதிவாளர் அலுவலகத்துல, ரைட்டர் ஒருத்தரு, போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்ய முயற்சி செஞ்சாராம்.. அப்போ, ஆவணங்களை சார் பதிவாளரு ஆய்வு செஞ்சிருக்காரு.. அதுல முறையான ஆவணங்கள் இல்லை பதிவு செய்ய முடியாதுன்னு சொல்லிட்டாராம்.. இதனால, கோபமடைஞ்ச ரைட்டர் மேஜையை தட்டி, சார் பதிவாளர்கிட்ட வாக்குவாதம் செஞ்சாராம்.. இதனால, பதிவு அலுவலகத்துல பரபரப்பு ஏற்பட்டிருக்குது.. இந்த சம்பவம் காட்டுப்பாடி காக்கிகள் நிலையத்துல புகாராக போயிருக்குது.. காக்கிகள் விசாரணையில, சமாதானம் பேசப்பட்டு வழக்கை முடிச்சிட்டாங்களாம்.. காட்டுப்பாடியில போலி ஆவணப்பதிவு புகார் பரபரப்பாக போய்கிட்டிருக்கிற நேரத்துல, இன்னொரு போலி ஆவணம் பதிவுக்கு முயற்சி செஞ்ச சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்பத்தியிருக்குதாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அடுத்தக்கட்ட சுற்றுப்பயணத்தில் ‘விட்டமின் ப’ கொடுத்தாவது அதிக கூட்டத்தை காட்டணும்னு உத்தரவு போட்டிருக்கிறாராமே சின்னமம்மி..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தென் மாவட்டத்தில் சமீபத்தில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட ‘சின்னமம்மி’ எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் வராததால் அப்செட்டில் சென்றாராம்… இதனால் சுற்றுப்பயணத்தை தற்போது ஒத்தி வைத்துள்ளாராம்… தொடர்ந்து, வரும் நாட்களில் மீண்டும் அல்வாவுக்கு பெயர் போன மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள சின்னமம்மி முடிவு செய்துள்ளாராம்… இந்த சுற்றுப்பயணத்தின் போது கூட்டத்தை அதிக அளவில் காட்டுவதற்கான முழுபொறுப்பை மனுநீதி சோழன் மாவட்டத்தை சேர்ந்த தனது சகோதரரின் மகனிடம் வழங்கியிருக்கிறாராம்.. முக்கியமாக, ‘விட்டமின் ப’ கொடுத்தாவது கூட்டத்தை சேர்க்க வேண்டும்னு அதிரடியாக உத்தரவிட்டுள்ளாராம்.. இதற்கான வேலைகள் தற்போது திரைமறைவில் நடந்து வருகிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘திருட்டு, வழிப்பறி, கொள்ளை வழக்கில் துப்புதுலக்கிய எஸ்.ஐ., ஏட்டு கூட்டணி பல கோடி சுருட்டியது அம்பலத்திற்கு வந்துள்ளதே…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கோவை சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் பணிபுரிந்த மூன்றெழுத்து பெயர் கொண்ட ஒரு சப்-இன்ஸ்பெக்டர், தமிழ்கடவுளின் மற்றொரு பெயர் கொண்ட ஒரு ஏட்டு ஆகிய இருவரும் சேர்ந்து சத்தம் இல்லாமல் கரன்சி குவித்து வந்தாங்களாம்… அதாவது, திருட்டு, வழிப்பறி, கொள்ளை வழக்குகளில் துப்பு துலக்கும்போது பறிமுதல் செய்யப்படும் நகை, பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களில் கிட்டத்தட்ட 80 சதவீதத்தை ஆட்டையை போட்டுவிட்டு, 20 சதவீதம் மட்டுமே கணக்கு காட்டி வந்திருக்காங்க.. இந்த சுருட்டல் விவகாரம் வெளியே கசிந்தவுடன், இதுபற்றி விசாரணை நடத்த மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவு போட்டாராம்.. அதில், குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என தெரியவந்ததும், இருவரையும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்காரு.. இருவரும் சுருட்டிய பணம் பற்றி அதிகாரி விசாரித்தபோது, சுமார் ரூ.30 லட்சம் மட்டுமே என கணக்கில் வந்துள்ளதாம்.. ஆனால், உண்மை அதுவல்ல… இருவரும் சேர்ந்து சுருட்டியது பல கோடி ரூபாய் இருக்கும் என்கிறார்கள், உடன் பணிபுரியும் ஏட்டுகள். இவர்களுக்கு ஒருசில இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் துணையாக இருந்ததாகவும், அவர்களும் பங்குத்தொகை பெற்றதாகவும் தற்போது தகவல் கசிந்திருக்கு… வலையில் சிக்காமல் தப்பித்த அந்த ‘கறுப்பு ஆடுகள் யார்’ என்ற விசாரணை மீண்டும் சூடுபிடித்துள்ளதாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘புதுச்சேரி பவர்புல் அதிகாரி பதவி ஏற்பு விழாவில் சிலரின் திடீர் விஜயத்தால் ஆளுங்கட்சி தரப்பு அதிர்ச்சியில் உறைந்துட்டாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ஒன்றியத்தில் ஆட்சி செய்து வருபவரின் நெருங்கிய நண்பரான ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி நேற்று புதுச்சேரி பவர்புல் அதிகாரியாக பொறுப்பை ஏற்றுக்கொண்டாரு.. இந்த விழாவில் புல்லட்சாமி உள்பட ஆளுங்கூட்டணி கட்சி எம்எல்ஏக்களும் கலந்து கொண்டு அவரை வாழ்த்தியிருக்காங்க… இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் கடந்த காங்கிரஸ் கால ஒன்றிய ஆட்சியில் பிரதமருடன் நெருக்கமாக இருந்த சாமி பெயர் கொண்ட மாஜி முதல்வர் கலந்துக்கிட்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறாரு.. விழாவை வழக்கம்போல் காங்கிரஸ், திமுக புறக்கணிக்கும்னு ஆளும் தரப்பு எதிர்பார்த்திருந்த நிலையில், நேர் எதிர்மாறாக பூங்கொத்து, சால்வைகளுடன் தடபுடலாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்துக்கூறி அசத்தியும் விட்டாங்களாம்… மேலும் முழுநேர நிர்வாகியாக பொறுப்பேற்றுள்ள ஐஏஎஸ் அதிகாரியுடன், ஏற்கனவே பழக்கத்தில் இருந்தவர் மாஜி முதல்வர் என்ற தகவல் உலாவும் நிலையில் அவர் நேரடியாக விழாவில் பங்கேற்றதால் ஆளுங்கட்சி தரப்பு அதிர்ச்சியில் இருக்காம்.. பவர்புல் அதிகாரி, சிறந்த நிர்வாகி என்பதாலும், தொலைநோக்கு பார்வை உடையவர் என்பதாலும் புதுச்சேரி மக்களுக்கு இவரது வருகை மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
கூட்டம் சேராததால் மறுக்கா மறுக்கா சுற்றுப்பயணத்துக்கு திட்டமிடும் சின்ன மம்மி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
previous post