*அப்புறப்படுத்த வலியுறுத்தல்
தியாகதுருகம் : கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பிரிதிவிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மேல்பூண்டி தக்கா பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்த குடிநீர் தொட்டியில் குழாய்கள் பொருத்தப்பட்டு அதன் மூலம் மேல் பூண்டி தக்கா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதம் அடைந்து, சிமெண்ட் தாரைகள் பெயர்ந்து காணப்படுகிறது. மேலும் நீர்த்தேக்க தொட்டியின் 4 தூண்களும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் இந்த தொட்டி எப்போதும் வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் தொழிலாளிகள் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய அச்சம் அடைந்துள்ளனர். எனவே ஆபத்தான நிலையில் உள்ள இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய நீர்நிலை தேக்க தொட்டி கட்டித் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.