Sunday, March 3, 2024
Home » மார்த்தாண்டத்தில் ஹைடெக் மார்க்கெட் பணிகள் தொடங்காமல் இழுத்தடிப்பு

மார்த்தாண்டத்தில் ஹைடெக் மார்க்கெட் பணிகள் தொடங்காமல் இழுத்தடிப்பு

by Lakshmipathi

*அதிகாரிகள் அலட்சியம்

மார்த்தாண்டம் : மார்த்தாண்டத்தில் ரூ.15 கோடியில் அமைய உள்ள நவீன காய்கறி சந்தை கட்டுமான பணிகளுக்கான ஆணை வழங்கியும் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக 2 மாதமாக பணி தொடங்கப்படாமல் இழுத்தடிப்பு செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.குமரி மாவட்டத்தில் தொடுவட்டி சந்தை என பெயர் பெற்ற மார்த்தாண்டம் காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது.

காய்கறிகள், வாழைத்தார்கள், பழவகைகள். இறைச்சி, மீன் போன்றவை தனித்தனி இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மலையோர கிராமம் முதல் கடற்கரை கிராமங்கள் மற்றும் மேற்கு மாவட்ட மக்களின் முக்கிய சந்தையாகவும், கேரள மாநிலத்தையொட்டி உள்ள முக்கிய சந்தையாகவும் மார்த்தாண்டம் சந்தை விளங்கி வருகிறது.தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் சந்தையில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்து வருகிறது.

இதனால் இந்த சந்தையை நவீன வசதிகளுடன் மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது.இந்நிலையில் குழித்துறை நகர்மன்ற தலைவராக பொறுப்பேற்ற பொன் ஆசைத்தம்பி மார்த்தாண்டம் சந்தையை ஹைடெக் சந்தையாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.இதன் பேரில் அதிகாரிகள் குழுவினர் பல கட்ட ஆய்வுகளை மேற்கொண்டனர். இதனையடுத்து 3 தளங்களுடன் மார்கெட் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

நவீன குளியல் அறை, கழிவறை, குடிநீர் வசதி, ஓய்வறைகள், கீழ் தளத்தில் கடைகள், கன ரக வாகனங்கள் மற்றும் கார், பைக் பார்க்கிங் பகுதிகள் முதல் தளத்தில் காய்கறி, பழங்கள் வாழைத்தார்கள், இறைச்சி கடைகள், பதப்படுத்தும் குடோன்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்க முடிவு செய்யப்பட்டு மேலும் மேல்தளத்தில் வணிக வளாகம், உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு மார்க்கெட் முழுவதும் கண்காணிப்பு கேமரா வளையத்திற்குள் கொண்டு வரப்படுகிறது. மொத்தம் 250 க்கும் மேற்பட்ட கடைகள் மார்கெட் பகுதியில் அனைத்து வசதிகளுடன் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசு அனுமதி பெற்று 15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்க 2 மாதம் முன்பே ஆணை ஒப்பந்த தராருக்கு வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை அதிகாரிகளின் அலட்சியத்தால் பணிகள் தொடங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் பெரிய ஏமாற்றத்தையும், வருவாய் இழப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

லாரிப்பேட்டையில் தற்காலிக சந்தை

கட்டுமான பணிகள் தொடங்கும் பட்சத்தில் வியாபாரிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படாத வகையில் மார்க்கெட் அருகே உள்ள லாரி பேட்டை பகுதியில் தற்காலிக சந்தை செயல்பட நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆனால் லாரி பேட்டையில் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வரும் மீன் ஏல சந்தை அப்புறப்படுத்த படாமல் உள்ளது.

வெளிமாவட்டங்களிலிருந்து வரும் மீன் லாரிகளால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் துர்நாற்றமும், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. எனவே மீன் ஏலச்சந்தையை அங்கிருந்து உடனடியாக மாற்றுவதுடன், அங்குள்ள துர்நாற்றம் வீசும் கழிவுகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் நகராட்சியை வலியுறுத்தி வருகின்றனர்.

24 மாதத்தில் பணிகள் முடிக்க திட்டம்

இது குறித்து நகர் மன்ற தலைவர் பொன் ஆசைத்தம்பி கூறியதாவது:மார்த்தாண்டத்தில் வியாபாரிகளும், அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில் ரூ.15 கோடியில் அனைத்து வசதிகளுடன் நவீன காய்கறி சந்தை அமைய உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் உடன் தொடங்கப்படும். மண்ணின் மைந்தனான அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் கட்டுமான பணிக்கான தொடக்க விழா நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த பணிகளை 24 மாதத்தில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்துள்ளோம்.

ஏற்கனவே மார்கெட் பகுதியில் மீனவர்கள் பயன் பெறும் வகையில் 5 கோடியில் நவீன மீன் சந்தை செயல் பட்டு வருகிறது. நவீன வசதிகளுடன் புதிய சந்தை செயல் படும் பட்சத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் அனைத்து பொருட்களும் கிடைக்கும் வகையில் மாவட்டத்தில் முக்கியமான சந்தையாக மாறும் இதற்கான பெருமை திமுக அரசையே சாரும் இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

2 × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi