Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ மகன் திருமணம்; திருமாவளவன் இன்று நடத்தி வைத்தார் மு.க.ஸ்டாலின், உதயநிதி நேரில் வாழ்த்து

சென்னை: விசிக துணைப்பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ மகன் திருமணத்தை திருமாவளவன் இன்று காலை நடத்தி வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் மணமக்களை வாழ்த்தினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளரும், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.பாலாஜியின் மகன் டாக்டர் பா.கவுதம்-டாக்டர் இரா.கீர்த்தி திருமணம் சென்னை நீலாங்கரை ஆர்.கே.கன்வென்சன் சென்டரில் இன்று காலை நடந்தது. திருமணத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி தலைமை தாங்கி தாலி எடுத்து கொடுத்து நடத்தி வைத்தார். திருமணத்திற்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலை வகித்தார். இதில் எம்பி, எம்எல்ஏக்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், விசிக நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணத்திற்கு வந்தவர்களை விசிக துணைப்பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ வரவேற்றார்.

முன்னதாக திருமண வரவேற்பு விழா நேற்று நடந்தது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி மணமக்களை வாழ்த்தினார். முதல்வருடன் விசிக தலைவர் திருமாவளவன், அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்பிக்கள் டி.ஆர்.பாலு, ரவிக்குமார் எம்பி ஆகியோர் மணமக்களை வாழ்த்தினர். மேலும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, பெரியகருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், பி.கே.சேகர்பாபு, மதிவேந்தன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஜி.ராமாகிருஷ்ணன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், ஐசரி கணேஷ், எம்எல்ஏக்கள் சிந்தனைச் செல்வன், பனையூர் பாபு, ஆளூர் ஷாநவாஸ், காரம்பாக்கம் கணபதி, ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, அரவிந்த் ரமேஷ், தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்பி மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திருமணத்தை நடத்தி வைத்து திருமாவளவன் பேசியதாவது: தமிழக சட்டமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் எம்எல்ஏக்களின் குரல் வலுவாக ஓங்கி ஒலித்து கொண்டிருக்கிறது. அமைச்சர்கள் அனைவரும் விசிக எம்எல்ஏக்கள் 4 பேரும், நான்கு முத்துக்கள் என்று சொல்லும் அளவிலே அனுப்பியிருக்கிறீர்கள். கருத்தியல் தெளிவுமிக்கவர்களாக இருக்கிறார்கள். வாதிடும் வல்லமை பெற்றவர்களாக இருக்கிறார்கள். தலைமைக்கும் கட்சிக்கும் விசுவாசமிக்கவர்களாக இருக்கிறார்கள். எம்எல்ஏ பாலாஜி ஏராளமான தரவுகளோடு வந்து சட்டமன்றத்திலே உரையாற்றுகிறார். ஹோம் ஓர்க் செய்கிறார் என்று அமைச்சர்கள் என்னிடத்திலே பாராட்டுகின்ற போது, நான் மிகச்சரியான எம்எல்ஏவை தேர்வு செய்து அனுப்பியிருக்கிறேன் என்று எண்ணி பெருமைப்படுகிறேன்.

நமக்கும் அரசியலுக்கும் சம்மந்தம் இல்லை என்று விலகி இருக்க முடியாது. நாம் இந்த அரசியலை மாற்றி அமைக்க வேண்டும். இந்த அரசியலில் நாம் ஒரு சக்தியாக தலைநிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகாரத்தை தீர்மானிக்கக்கூடியவர்களாக நாம் வளர்ச்சி பெற வேண்டும். விசிக அப்படி ஒரு தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக வலிமை பெற்று இருக்கிறது. தமிழக அரசியலில் இன்னும் சாதிக்க வேண்டியது ஏராளம் இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்