புதுடெல்லி: கடந்த 20 ஆண்டுகளாக சந்தித்து வந்த எப்போது திருமணம் என்ற கேள்வியை இப்போது நான் கடந்துவிட்டேன் என்று காஷ்மீர் மாணவிகளிடம் ராகுல்காந்தி தெரிவித்தார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியை காஷ்மீர் கல்லூரி மாணவிகள் சந்தித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். இந்த கேள்விகள் அவரது யூடியூப் சேனலில் ஒளிபரப்பப்பட்டன. அதில் எப்போது திருமணம் செய்யப்போகிறீர்கள் என்று ஒரு கேள்வியும் உண்டு. அந்த கலகலப்பான உரையாடல் விவரம் வருமாறு:
காஷ்மீர் மாணவிகள்: நீங்கள் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டுள்ளீர்களா?
ராகுல்காந்தி: நான் அதைத் திட்டமிடவில்லை, ஆனால் அது நடந்தால்…
காஷ்மீர் மாணவிகள்: தயவுசெய்து எங்களையும் திருமணத்திற்கு அழைக்க வேண்டும்.
ராகுல்காந்தி: கண்டிப்பாக உங்களை நான் அழைப்பேன். ஆனால் கடந்த 20 முதல் 30 ஆண்டுகளாக எப்போது திருமணம் என்ற கேள்வி பற்றிய அழுத்தத்தை சந்தித்து வந்தேன். இப்போது நான் அதை கடந்துவிட்டேன். இவ்வாறு இந்த உரையாடல் இருந்தது. ரேபரேலி தொகுதியில் எம்பியாக தேர்வு பெற்ற பிறகு நன்றி அறிவிப்பு கூட்டத்திலும் பிரியங்காகாந்தி,’ எப்போது ராகுல் திருமணம் செய்வார் என்று பெண்கள் கேட்கிறார்கள். அதற்கு பதில் வேண்டும்’ என்றார். அப்போது பதில் அளித்த ராகுல்காந்தி,’ அது மிகவிரைவில் நடக்கும்’ என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
* டெல்லியில் இருந்து காஷ்மீரை இயக்குவதில் எந்த அர்த்தமும் இல்லை
ராகுல்காந்தி கூறுகையில்,’என்னைப்பொறுத்தவரை பிரதமர் மோடியின் பிரச்னை என்னவென்றால் அவர் யாருடைய பேச்சையும் கேட்பதில்லை. ஆரம்பத்தில் இருந்தே அவர்கள் சொல்வதுதான் சரி என்று நம்பும் ஒருவருடன் எனக்கு பிரச்சனை உள்ளது. அவர் செய்வது தவறு என்று அவருக்குக் காட்டுவதைப் பார்த்தாலும், அவர் ஏதாவது பிரச்சனையை உருவாக்குவார். இது பாதுகாப்பின்மையிலிருந்து வருகிறது, அது வலிமையிலிருந்து வரவில்லை. பலவீனத்திலிருந்து வருகிறது.
இந்திய வரலாற்றில் ஒரு மாநிலத்தில் இருந்து மாநில அந்தஸ்து பறிக்கப்படுவது இதுவே முதல்முறை. காஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம், அது நடந்த விதம், எங்களுக்குப் பிடிக்கவில்லை. ஆனால், இப்போது எங்களைப் பொறுத்தவரை மாநில அந்தஸ்தை திரும்பப் பெறுவதே கொள்கையாகும், அதில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் பிரதிநிதித்துவமும் அடங்கும். மோடி வைத்திருக்கும் நிலை டெல்லியில் இருந்து காஷ்மீரை இயக்கும் நிலை. இதில் எந்த அர்த்தமும் இல்லை’ என்று கூறினார்.