சென்னை: திருமணம் செய்யாமல் கணவன் -மனைவிபோல் வாழ்ந்தபோது எழுதிக்கொடுத்த சொத்தை பெண் இறந்த பிறகு ஆண் திரும்ப தருமாறு கோர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயச்சந்திரனுக்கு ஏற்கனவே திருமணமாகி 5 குழந்தைகள் உள்ளன. அவரை சட்டப்படி விவாகரத்து செய்யாமல், பள்ளி தலைமை ஆசிரியையாக வேலை செய்த மார்கரெட் அருள்மொழி என்பவருடன் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தியுள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்த ேநரத்தில் மார்கரெட் பெயரில் ஒரு வீட்டை 2009ம் ஆண்டு செட்டில்மென்ட் பத்திரம் மூலம் ஜெயச்சந்திரன் எழுதிவைத்துள்ளார்.
இந்நிலையில், 2013ல் மார்கரெட் அருள்மொழி இறந்து விட்டார். இதையடுத்து, தான் எழுதிவைத்த செட்டில்மென்ட் பத்திரத்தை ஜெயச்சந்திரன் ரத்து செய்து விட்டார். இதற்கிடையில், தன் மகள் மார்கரெட் அருள்மொழிக்கு வாரிசு யாரும் இல்லாததால், அவர் பெயரில் உள்ள சொத்து தனக்குத்தான் சொந்தம் என்று அவரது தந்தை யேசுரத்தினம் வேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தனக்கு சாதகமான தீர்ப்பை பெற்றார். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயச்சந்திரன் வழக்கு தொடர்ந்தார். அதில், மார்கரெட் அருள்மொழி பெயரில் எழுதி வைத்த வீடு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து வாங்கப்பட்டது. அந்த வீட்டுக்குரிய கடன் தொகையை என் ஊதியத்தில் இருந்துதான் செலுத்தினேன். அவர் தற்போது இறந்து விட்டதால், எழுதி வைத்ததை ரத்து செய்துள்ளேன் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்எம்டி.டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, திருமணம் செய்துகொள்ளாமல் கணவன், மனைவியாக வாழ்ந்தோம் என்று கூறுவதை ஏற்க முடியாது. தன்னுடைய வாரிசுதாரர் ஜெயச்சந்திரன்தான் என்று பணி ஆவணத்தில் மார்கரெட் அருள்மொழி எழுதி வைத்திருக்கிறார் என்பதற்காக ஜெயச்சந்திரன் சட்டப்படியான வாரிசுதாரர் என்று ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, மார்கரெட் அருள்மொழியின் பெயரில் உள்ள சொத்துக்கு அவரது தந்தைதான் வாரிசுதாரர். அவர் தற்போது உயிரோடு இல்லை என்பதால் இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின்படி அவரது வாரிசுதாரர்களுக்கு இந்த சொத்து சென்றடைய வேண்டும் என்று உத்தரவிட்டார்.