Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

விடிந்தால் திருமணம் நடக்கவிருந்த நிலையில் காதலனை வரவழைத்து மணமகள் எஸ்கேப்: மண்டபத்தில் அதிர்ச்சி

திருமலை: விடிந்தால் திருமணம் நடக்கவிருந்த நிலையில் காதலனை வரவழைத்து மணமகள் எஸ்கேப் ஆனதால், பெற்றோர், மணமகன், திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆந்திர மாநிலம் அனந்தபூரை சேர்ந்தவரின் 23 வயது மகளுக்கும், கர்னூல் மாவட்டம் கிருஷ்ணகிரி மண்டலம் லக்கசாகரம் கிராமத்தை சேர்ந்த விஸ்வாசி (28) என்பவருக்கும் திருமணம் செய்ய பெரியோர்கள் முடிவு செய்தனர். இதையெட்டி அங்குள்ள மண்டபத்தில் நேற்று அதிகாலை திருமணம் நடக்கவிருந்தது. முன்னதாக மணமகளுக்கு ஆரம்பத்தில் இருந்து மணமகனை பிடிக்கவில்லை எனக்கூறி வந்துள்ளார்.

இருப்பினும் பெற்றோர் சமரசப்படுத்தி திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர். மணமகளுக்கும் அதேபகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் காதல் இருந்துள்ளது. தங்களது காதல் விவகாரத்தை தனது பெற்றோருக்கு ெதரிவிக்காமல் இளம்பெண் மறைத்து வந்துள்ளார். இந்நிலையில் தனக்கு திருமணம் நடக்க உள்ள தகவலை தனது காதலனுக்கு கூறியுள்ளார். இருப்பினும் திருமணத்தை நிறுத்திவிட்டு நாம் இருவரும் ஊரைவிட்டு சென்றுவிடலாம் என காதலன் யோசனை கூறியுள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு இளம்பெண்ணுக்கும், மணமகன் விஸ்வாசிக்கும் திருமண வரவேற்பு நடந்தது. இதில் இருவீட்டாரின் ஏராளமான உறவினர்கள் கலந்துகொண்டனர். அந்த திருமணத்திற்கு ஏற்கனவே போட்ட திட்டத்தின்படி தனது காதலனையும், இளம்பெண் வரவழைத்துள்ளார்.

நள்ளிரவில் திருமண வரவேற்பு முடிந்த நிலையில் மணமக்கள் இருவரும் அவரவர் அறைக்கு சென்றுள்ளனர். விடிந்தால் திருமணம் என்பதால் அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் முகூர்த்தத்திற்கு 4 மணிநேரமே இருந்த நிலையில் திடீரென மணமகள் மாயமானார். இதனால் திருமண மண்டபம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. மணமகளின் பெற்றோர், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என அனைவரும் நாலாப்புறமும் தேட தொடங்கினர். ஆனால் தகவல் இல்லை. இதனால் சந்தேகமடைந்து திருமண மண்டபத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்தனர். அப்போது மணமகள், வாலிபர் ஒருவரின் கையை பிடித்தபடி அவசரமாக வெளியேறி பைக்கில் செல்வது தெரிந்தது. அப்போதுதான் தங்கள் மகளின் காதல் குறித்து பெற்றோருக்கு தெரியவந்தது. அதைக்கண்டு மணமகளின் பெற்றோர் கதறி அழுதனர்.

இந்த தகவலை அறிந்து மணமகன் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். பல லட்சம் செலவு செய்து திருமணம் நடத்தும் நிலையில் இதுபோன்ற சம்பவத்தை ஏற்க முடியாது என மணமகன் குடும்பத்தினர் வாக்குவாதம் செய்தனர். இதனால் திருமண மண்டபத்தில் இருவீட்டாருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மண்டபத்தைவிட்டு வெளியேறிய மணமகன் குடும்பத்தினர், சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து பத்திகொண்டா காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர் திருமணத்திற்கான செலவுகளை திருப்பித்தந்துவிடுவதாக மணமகளின் குடும்பத்தினர் எழுதி கொடுத்தனர். இதையேற்று மணமகன் குடும்பத்தினர் அங்கிருந்து சோகத்துடன் சென்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.