அவுரங்காபாத்: பீகார் மாநிலம் அவுரங்காபாத்தை சேர்ந்தவர் கூஞ்சா சிங். 20 வயது இளம் பெண். இவருக்கும், நபிநகர் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட பிரியான்சு(25) என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 45 நாளில், அதாவது கடந்த ஜூன் 24 ஆம் தேதி பிரியான்சு வேலைக்கு சென்று விட்டு பைக்கில் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்த போது மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக அவுரங்காபாத் எஸ்பி அம்ப்ரிஷ் ராகுல் தனிப்படை அமைத்து விசாரித்தார். அப்போது புதுப்ெபண் கூஞ்சா சிங் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்த போது ஒரு நபருக்கு அடிக்கடி பல மணி நேரம் பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த தனிப்படை போலீசார் கூஞ்சா சிங்கை பிடித்து விசாரித்த போது, கணவர் பிரியான்சுவை கூலிப்படையை ஏவி கொன்றதை ஒப்புக்கொண்டார்.
அதற்கான காரணம் குறித்து போலீசாரிடம் அவர் தெரிவித்த தகவல் வருமாறு: புதுப்பெண் கூஞ்சா சிங்கிற்கும், 55 வயதான அவரது தாய்மாமன் ஜீவன்சிங்கிற்கும் இடையே நெருங்கிய உறவு இருந்துள்ளது. ஜீவன் சிங்கை திருமணம் செய்ய கூஞ்சா சிங் விரும்பினார். ஆனால் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து பிரியான்சுவுடன் திருமணம் செய்து வைத்து விட்டனர். இதனால் தாய்மாமா ஜீவன்சிங்கை மறக்க முடியாமல் தவித்த கூஞ்சா சிங், கூலிப்படையை சேர்ந்த ஜெய்சங்கர், முகேஷ் சர்மா ஆகியோரை ஏவி தனது கணவர் பிரியான்சுவை சுட்டுக்கொன்றது தெரிய வந்தது. இந்த கொலை தொடர்பாக கூஞ்சா சிங், கூலிப்படையினர் ஜெய்சங்கர், முகேஷ்சர்மா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தப்பி ஓடிய தாய்மாமா ஜீவன்சிங்கை போலீசார் தேடி வருகிறார்கள்.