பெங்களூரு: மங்களூரு வாமஞ்சூர் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துவந்த சுலைமான் (50) என்பவர் திருமண புரோக்கராக இருந்துவந்தார். தனது உறவுக்காரரான முஸ்தபா (30) என்பவருக்கு சுலேமான் பார்த்து கொடுத்த பெண்ணுடன் 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை நடந்துவந்துள்ளது.
தனது திருமண வாழ்வு அமைதியற்ற முறையில் பிரச்னையாக சென்றதால் முஸ்தபா விரக்தியில் இருந்துள்ளார். முஸ்தபாவுடன் ஏற்பட்ட சண்டையில் அவரது மனைவி 6 மாதங்களுக்கு முன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அதனால் மன உளைச்சலில் இருந்த முஸ்தபா, தனக்கு பெண் பார்த்துக் கொடுத்த சுலைமானுக்கு கடந்த 22ம் தேதி வியாழக்கிழமையன்று போன் செய்து தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார். இதையடுத்து, முஸ்தபாவிடம் விளக்கமளிப்பதற்காக சுலைமான், அவரது 2 மகன்களான ரியாப் மற்றும் சியாப் ஆகிய இருவரையும் அழைத்துக்கொண்டு மங்களூரு வலச்சிலில் உள்ள முஸ்தபாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
சுலைமானின் மகன்கள் இருவரும் முஸ்தபாவின் வீட்டிற்கு வெளியே நிற்க, வீட்டிற்குள் சுலைமானுக்கு முஸ்தபாவிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வீட்டை விட்டு வெளியேறிய சுலைமானின் கழுத்தில் முஸ்தபா கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து சுலைமான் உயிரிழந்தார். மேலும், சுலைமானின் மகன்களையும் கடுமையாக தாக்கியதில், அவர்கள் இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த மங்களூரு ஊரக போலீசார், கொலையாளி முஸ்தபாவை கைது செய்தனர்.