விழுப்புரம்: விழுப்புரம் அருகே பணம், நகைகளை எடுத்துச்சென்று வேறொருவருடன் உல்லாச வாழ்க்கை நடத்துவதாக பிரிந்து சென்ற மனைவியை விமர்சித்து கணவர் போஸ்டர் அச்சடித்து ஒட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் தக்காதெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(42). இவருக்கும் கோலியனூர் பகுதியைச்சேர்ந்த விஜி என்பவருக்கும் கடந்த 2017ல் திருமணம் நடந்ததாம். இந்நிலையில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021ல் வெங்கடேசனை பிரிந்து சென்ற விஜி, கோலியனூரைச் சேர்ந்த கன்னியப்பனை 2வது திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தியுள்ளார்.
இதனிடையே மனைவி விஜி மீது குற்றம்சாட்டி வெங்கடேசன் கோலியனூர், விழுப்புரம் பகுதியில் நேற்று போஸ்டர்களை அச்சடித்து ஒட்டியுள்ளார். அதில் தனது திருமணத்தின்போது விஜியுடன் எடுத்த புகைப்படங்களையும், ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடும் புகைப்படங்கள் உள்ளிட்டவைகளை வைத்து முக்கிய அறிவிப்பு என்று குறிப்பிட்டுள்ளார். அதில், ‘விஜி என்பவர் வெங்கடேசனை கல்யாணம் செய்து 25 வருடமாகி 2 மகள்களும், பேரன், பேத்திகளும் உள்ளது. இவர் என்னிடமிருந்து 20 பவுன் நகை, ரூ.15 லட்சம் ரொக்கப்பணத்தை எடுத்துகொண்டு சமீபகாலமாக கோலியனூரைச் சேர்ந்த கன்னியப்பன் என்பவருடன் உல்லாச வாழ்க்கை வாழ்கிறார்.
என் உயிருக்கும் ஆபத்தாக உள்ளது’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனிடையே போஸ்டர் விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும், தனது வீட்டிற்கு வந்து பிரச்னை செய்த வெங்கடேசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் விஜி வளவனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவி இறந்து விட்டதாக ‘பேனர்’ வைத்த ஆடிட்டர்
கிருஷ்ணகிரி அருகே, பெத்ததாளாப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சேதுராம்(44), ஆடிட்டர். இவரது மனைவி சுகன்யா(34). இவரும் ஆடிட்டர். கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்னை இருந்து வந்தது. இதனால் சுகன்யா, தனது பெற்றோர் வீட்டுக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சென்று விட்டார். இதையடுத்து, விவாகரத்து கேட்டு இருவரும் தொடர்ந்த வழக்கு, கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி, கிருஷ்ணகிரி நகர் ஆர்.சி.சர்ச் அருகிலும், பழையபேட்டை காந்தி சிலை அருகிலும், வேறு சில இடங்களிலும், சுகன்யா இறந்து விட்டதாக பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த சுகன்யா, கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் அளித்து உள்ளார். இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து ஆடிட்டர் சேதுராமனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.