கருங்கல்: திருமணமான 6 மாதங்களில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கி இறந்த நர்சின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். கூடுதல் வரதட்சணை கேட்டு கணவன் குடும்பத்தினர் அடித்து கொலை செய்துள்ளதாக அவர்கள் புகார் கூறியுள்ளனர். இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து உடலை பெற்று சென்றனர். குமரி மாவட்டம் கருங்கல் அடுத்த திக்கணங்கோடு செம்பிலாவிளை பகுதியை சேர்ந்தவர் ராபின்சன். இவரது மகள் ஜெபிலா மேரி (26). பி.எஸ்.சி. நர்சிங் பட்டதாரியான இவர் முட்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார்.
இவரும், இனையம் பகுதியை சேர்ந்த மரிய நிதின் ராஜ் (26) என்பவரும் கடந்த இரு வருடங்களாக காதலித்து வந்தனர். மரிய நிதின்ராஜ் சென்னையில் உள்ள ஒரு கம்பெனியில் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் வீட்டில் தெரிய வந்ததை தொடர்ந்து, பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 50 பவுன் நகை மற்றும் ரூ.50 லட்சம் செலவில் மேல் மிடாலம் பகுதியில் ஒரு புதிய வீடு ஆகியவற்றை சீதனமாக கொடுத்துள்ளனர். திருமணத்துக்கு பின், மேல் மிடாலம் பகுதியில் உள்ள வீட்டில் தான் மரிய நிதின் ராஜ், ஜெபிலா மேரி இருவரும் வசித்து வந்தனர்.
அவர்களுடன், நிதின்ராஜ் பெற்றோரும் தங்கி இருந்தனர். திருமணத்திற்கு பிறகு மரிய நிதின்ராஜ், வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே ஜெபிலா மேரியின் நகைகளை, மரிய நிதின் ராஜ் மற்றும் அவரது பெற்றோர் வாங்கி அடகு வைத்ததாகவும், அதை திருப்பி கேட்ட ஜெபிலா மேரியை அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் தெரிகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம், ஜெபிலா மேரி தனது வீட்டில் சடலமாக தூக்கில் தொங்கினார். தகவலறிந்து கருங்கல் போலீசார் ஜெபிலா மேரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே ஜெபிலா மேரியின் தாய் புஷ்பலதா, காவல் நிலையத்தில் அளித்த புகாரில், திருமணமான 2 மாதத்திலேயே எனது மகளிடம் கூடுதல் வரதட்சணையாக ரூ.5 லட்சம் கேட்டு அடித்து கொடுமைப்படுத்தினர்.
எனது மகள் என்னிடம் எப்படியாவது பணத்தை தயார் செய்து தருமாறு கேட்டாள். நான் உடனே என் தாலி செயினை அடகு வைத்து ரூ.5 லட்சம் கொடுத்தேன். அடகு வைத்த நகைகளை எனது மகள் கேட்டதற்கு தகாத வார்த்தை பேசி தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கியதாக, அவளுடன் வேலை பார்க்கும் ஒருவரிடம் கூறியுள்ளார். எனது மகள் இறந்து விட்டாள் என்பதை கூட, கிண்டலாக கூறினர். நான் சென்று பார்த்த போது எனது மகளின் கழுத்தில் கயிறால் இறுக்கியது போன்ற தடம் உள்ளது. எனது மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளது, அடித்து கொலை செய்துள்ளனர்’ என கூறி உள்ளார்.
இதையடுத்து முதற்கட்டமாக மரிய நிதின் ராஜ், அவரது தந்தை மரிய டேவிட் மற்றும் தாயாரை காவல் நிலையத்துக்கு வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், ஆசாரிப்பள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் நேற்று காலை ஜெபிலா மேரியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது ஜெபிலா மேரியின் உறவினர்கள் உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்து பிணவறை முன்பு போராட்டம் நடத்தினர். மேலும் பெண்ணின் உறவினர்கள் ஆவேசமாக ஜெபிலா மேரியை கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
அவர்களிடம் போலீசார், பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் முறையான விசாரணை நடத்தியே கைது நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.
எனவே இப்போது உடலை பெற்று செல்லுங்கள் என கூறினர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஜெபிலா மேரியின் உடலை உறவினர்கள் பெற்றுச் சென்றனர். பின்னர், அவரது குடும்ப கல்லறை தோட்டத்தில் ஜெபிலா மேரியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
* கடிதம் உண்மையா?
ஜெபிலா மேரி வீட்டில் ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில், தனது சாவிற்கு யாரும் காரணம் அல்ல என எழுதி வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். எனினும், இந்த கடிதத்தின் கடைசி பக்கத்தை மட்டுமே போலீசார் உறவினர்களிடம் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதில் உள்ள கையெழுத்து உண்மையில் ஜெபிலா மேரியுடையதா என சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
* மாமியாரை பாதுகாக்கும் போலீஸ் : தங்கையை வைத்து டபுள் கேம்
புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மாமியார் சித்ராதேவி நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவரை சேவூர் போலீஸ் நிலையத்தில் இருந்து போலீசார், மருத்துவ பரிசோதனைக்கு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது ஒரு நாடகம், போலீசார் உதவியுடன் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சித்ரா தேவியை கைது செய்து போலீசார் அழைத்து வந்த போது, அது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்க நிருபர்களை காவல்நிலையத்திற்கு உள்ளே போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால், அவர்கள் வெளியே நின்றனர். இதற்கிடையே, சித்ராதேவியை அழைத்து வந்த போது, அவருடன் அவரை போலவே இருக்கும் அவரது தங்கையையும் போலீசார் அழைத்து வருகிறார்கள்.
இருவரும் நடந்து வருகிறார்கள். தொடர்ந்து சித்ரா தேவி போலீஸ் வாகனத்தில் ஏறியவுடன், உடன் வந்த சகோதரி திரும்ப செல்கிறார். அவரை பெண் போலீஸ் அழைத்து செல்கிறார். இருவரையும் சகோதரியின் கணவர், நிருபர்கள் புகைப்படம் எடுக்க முடியாதபடி மறைத்தபடி பாதுகாப்பு கொடுக்கிறார். போலீசார் முன்பே இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் போலீசாரின் செயல்பாடு குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.
* வரதட்சணை கொடுமையால் அடுத்தடுத்து மடிந்த புதுப்பெண்கள்
கடந்த சில நாட்களுக்கு முன் வரதட்சணை கொடுமை மற்றும் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் கணவன், மாமியார், மாமனார் கொடுமைப்படுத்தியதாக அவிநாசியில் திருமணமான 77 நாளில் இளம்பெண் ரிதன்யா காருக்குள் விஷம் குடித்து தற்கொலை செய்தார். இதுதொடர்பாக அவரது தந்தைக்கு வாட்ஸ் அப்பில், 10 ஆடியோக்களை மரண வாக்குமூலமாக அனுப்பி உள்ளார். இந்த ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல், கூடுதலாக 1 பவுன் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் திருமணமான 4 நாட்களில் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்த முஸ்லிம் நகரை சேர்ந்த லோகேஸ்வரி தனது தாய் வீட்டில் கழிவறையில் தற்கொலை செய்து கொண்டார். தற்போது, கூடுதல் வரதட்சணைக்காக நர்ஸ் அடித்து கொல்லப்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். வரதட்சணை கொடுமையால் அடுத்தடுத்து புதுப்பெண்கள் தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* குழந்தையுடன் வீட்டை விட்டு விரட்டியடித்து டாக்டர் மனைவியிடம் வரதட்சணை கேட்டு யூடியூபர் கொலை மிரட்டல்: குடும்பத்தினர் மீது பாய்ந்தது வன்கொடுமை வழக்கு
தேனி அருகே வீரபாண்டி, கேஎம்சி முல்லை நகரில் குடியிருப்பவர் சுதர்சன் மனைவி விமலா தேவி(28). டாக்டர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விமலாதேவி, மதுரையில் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்தபோது, மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த சுதர்சன் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டது. அப்போது சுதர்சன் யூடியூப் சேனல் ஒன்றில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
பின்னர், அவரே சொந்தமாக யூடியூப் சேனல் தொடங்கி நடத்தி வருகிறார். இருவரும் வெவ்வேறு சமூகமாக இருந்த நிலையில், இருவருக்கிடையேயான நட்பு காதலாக மாறியது. இதையடுத்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் மதுரையில் திருமணம் நடந்தது. அப்போது 30 பவுன் நகை, ரூ.5 லட்சம் பணம் மற்றும் ரூ.2 லட்சம் சீர்வரிசை பொருட்களை விமலாதேவியின் பெற்றோர் வரதட்சணையாக கொடுத்தனர்.
இதன்பிறகு, சுதர்சன் மதுரையில் வீடு கட்டும்போது விமலாதேவியின் 30 பவுன் நகையை வாங்கி வீட்டு கட்டுமானப் பணிகளை முடித்துள்ளார். இதன்பின்னர், வரதட்சணை போதாது எனக்கூறி மேலும், 20 பவுன் கொடுத்தால்தான் சேர்ந்து வாழ முடியும் என கர்ப்பமாக இருந்த விமலாதேவியை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் வீட்டிற்கு வந்த விமலாதேவி அங்கு குழந்தை பெற்றார்.
விமலாதேவியையும், குழந்தையையும் அழைத்துச் செல்ல ரூ.5 லட்சம் மற்றும் 20 பவுன் நகை தர வேண்டும் என சுதர்சன் மற்றும் அவரது பெற்றோர் சுந்தர்ராஜன், மாலதி, சகோதரி சக்திபிரியா, இவரது கணவர் விக்னேஸ்வரன் ஆகியோர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ரூ.5 லட்சம் கொடுத்து விமலாதேவி கணவருடன் மதுரைக்கு சென்றுள்ளார். அப்போது, கணவரின் குடும்பத்தினர் ரூ.5 லட்சம் மட்டும் போதாது.
20 பவுன் நகையும் வாங்கி வந்தால்தான் வாழ முடியும் எனக் கூறி அடித்துவிரட்டியதோடு, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விமலாதேவி புகாரின்படி தேனி அனைத்து மகளிர் போலீசார், கணவர் சுதர்சன், அவரது தந்தை சுந்தர்ராஜன், தாய் மாலதி, சகோதரி சக்திபிரியா, அவரது கணவர் விக்னேஸ்வரன் ஆகியோர் மீது வன்கொடுமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.