Sunday, June 22, 2025
Home ஆன்மிகம் திருமணம், குழந்தை பிறப்பு எப்போது?

திருமணம், குழந்தை பிறப்பு எப்போது?

by Porselvi

குரு, ஜோதிடத்தில் அற்புதமான கிரகம். எந்த ஜோதிடரும், ஒரு ஜாதகத்தை ஆராயும் பொழுது, குரு எப்படி அமர்ந்து இருக்கிறார்? அவருடைய பார்வை எந்த ஸ்தானங்களில் படுகிறது? அது சுபப் பார்வையா அல்லது பலவீனமான பார்வையா என்பதை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் பலன் சொல்ல ஆரம்பிப்பார்கள். குரு, ராகு – கேதுவோடு சேர்ந்திருக்கும் பொழுதும் அல்லது உக்கிரமான சனியால் பார்க்கப்படும் பொழுது, அவருடைய பலம் குறையும். குரு பார்வை இருந்தும் ஏன் பலன் தரவில்லை என்று சிலர் கேள்வி கேட்பார்கள். உதாரணமாக, சனியின் மூன்றாம், பத்தாம் பார்வையைப் பெற்ற குரு வீரியமான பலன்களைத் தரமாட்டார். காரணம், சனியின் பார்வையால் அவரே சற்று பலவீனம் அடைந்துவிடுவார். அதே நேரம் சனி இருக்கும் இடத்தில் ஒன்பதாம் பார்வையாக குரு பார்த்தால், சனியின் வீரியத்தைக் குறைத்து சனியால் ஏற்படும் சங்கடங்களை தடுத்து விடுவதும் உண்டு.

இந்த இரண்டு நிலைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். தீய கிரகங்களின் தீமையைக் குறைக்கும் அதே குருபகவான், தீய கிரகங்களால் பாதிக்கப்பட்டு தன்னுடைய வலிமையையும் இழந்து விடுவதுண்டு. ஆகையினால், வெறும் குருபார்வை என்று வைத்துக் கொண்டு பலன்களைச் சொல்ல ஆரம்பித்தால், அது சரியாக பல நேரங்களில் வராது. அடுத்து குருவினுடைய ஸ்தான பலன் மிகவும் முக்கியம். தனித்த குரு, பெருமளவு சுப பலன்களைத் தராது. சமயத்தில் மிக மோசமான பலன்களைத் தந்துவிடும். மகர லக்கினத்திற்கு கடகத்தில் உச்சமடைந்த குரு, தனித்து நிற்கும் பொழுது, ஜாதகரின் மனதிற்கு தைரியத்தைத் தருவாரே தவிர, பெரிய அதிர்ஷ்டங்களைத் தந்துவிட மாட்டார். கஷ்டங்களையும் பெரிய அளவு நிவர்த்தி செய்ய மாட்டார். இன்னும் சொல்லப் போனால், மகரத்திற்கு ஏழாம் இடம் கடகம். களத்திர ஸ்தானம். அந்த களத்திரப் பலன்களைத் தடுத்து விடுவதும் உண்டு. அந்த இடத்தில் அவர் வேறு ஏதாவது ஒரு கிரகத்தோடு சேர்ந்து இருந்தால் பாதகம் நடக்காமல் இருக்கும். இன்னொரு கோணத்தில் மகரத்திற்கு 3,12 குடையவர் அதிக வீரியம் பெறுவதும் நல்லதல்ல. பலன்கள் காரகத்தின் அடைப்படையில்தான் நடக்கும்.

குருவின் காரகத் துவம் பல. ஆசிரியர், சமய சொற்பொழிவாளர், மடாதிபதி, பிறருக்கு ஆலோசனை சொல்பவர் என்ற நிலைகளில் குருவின் பங்கு கட்டாயமாக இருக்கும். அதே சமயத்தில் அவர் கெட்டுவிடவும் கூடாது. தான தர்மங்களுக்கும், வங்கி முதலிய பணம் புரளும் துறைகளுக்கும் அவர் காரகம் வகிக்கின்றார். பணத்திற்கு சுக்கிரனும் காரகத்துவம் பெற்றிருந்தாலும், குருவுக்குதான் தனகாரகன் என்ற பெயர். குரு பலம் பெற்றிருந்தால் தாங்கள் அடைந்த செல்வத்தை தர்ம காரியங்களுக்குப் பயன் படுத்துவார்கள். அதைப் போலவே குழந்தைச் செல்வம் வேண்டும் என்று சொன்னால், நிச்சயம் குருவின் அருள் இருக்க வேண்டும். குரு வலிமை பெற்றிருந்தாலும் அல்லது ஐந்தாம் இடம் வலிமை பெற்றிருந்தாலும் வேறு தோஷங்கள் இருந்தாலும் நிச்சயம் அவர்களுக்குக் குழந்தை உண்டு. அதே நேரத்தில் ஐந்தாம் இடம் வலிமை பெற்று வேறு வகையில் கெட்டிருந்தால், புத்திரபாக்கியம் கிடைக்குமே தவிர, குழந்தையால் நிம்மதியைப் பெற முடியாது. அப்படியும் சில நேரங்களில் அமைந்து விடுவதுண்டு.

வேறு எந்தக் கிரகத்துக்கும் இல்லாத அளவுக்கு குருவுக்கு மட்டும் சுபகாரகத்துவங்கள்தான் அதிகம் உள்ளது. மஞ்சள் நிறம் உள்ளவர் என்பதால் தங்கம் போன்ற விலை உயர்ந்த உலோகங்களுக்கும் அவர் காரகர் ஆகிறார். பெண்களுக்கு களத்திர காரகனாக செவ்வாயும், ஆண்களுக்கு களத்திர காரகனாக சுக்கிரனும் இருப்பினும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு குருவின் ஆசீர்வாதமும் அவசியம். சட்டம், ஒழுங்கு, நீதிபதிகள் முதலிய முக்கியமான விஷயங்களுக்கு குருவே காரகம். உடல் பகுதி களில் வயிற்றுப் பகுதிக்கும், குறிப்பாக வயிற்றில் உள்ள கல்லீரலுக்கும், உடலை பருமனாக்கும் கொழுப்பு முதலிய உபாதைகளுக்கும் குருகாரகம் ஆகின்றார். குருபலம் பெற்று ஏதோ ஒரு வகையில் லக்னத்தோடு தொடர்பு கொண்டிருந்தால், அவர்கள் சற்று பருமனான உடலமைப்பு பெற்றவர்களாகவே இருக்கின்றார்கள்.

கோள் சாரத்தில் குரு மிகச் சிறந்த பங்கினை வகிப்பார். ஒரு நிகழ்வின் உறுதிப்பாட்டை குரு செய்வார். அதை காலதேசத்தோடும் ஜனன ஜாதக குருவின் நிலையோடும் பொருத்திப் பார்க்க வேண்டும். குரு பெயர்ச்சிப் பலனைப் பார்க்க, ஜன்ம ஜாதக குருவின் நிலை, தற்சமயம் குரு இருக்கக்கூடிய நிலை, இவை இரண்டிற்கும் ஏற்படக் கூடிய தொடர்புகளை ஆராய்ச்சி செய்தால் நமக்கு வியப்பான உண்மைகள் விளங்கும்.நான் பெரும்பாலும் ஆய்வுகள் மேற்கொள்ளும் பொழுது சொந்த ஜாதகத்தையே ஆய்வு செய்து பார்ப்பது உண்டு. எனக்கு மிகமிக நெருங்கியவர்கள் ஜாதகங்களையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வது உண்டு. பெரும் பாலும் எந்த பலன்கள் ஒத்து வருகிறதோ அதை மட்டுமே எழுதுவது உண்டு.என்னுடைய ஜன்ம ஜாதகத்தில் குருவும் சனியும் தனுசு ராசியில் இருக்கின்றார்கள். என்னுடைய 27வது வயதில் குரு, மேஷ ராசியில் இருந்த பொழுது திருமணம் நடைபெற்றது.

மேஷ ராசியில் இருந்து குரு, தனுசு ராசிக்கு ஒன்பதாம் பார்வையாகப் பார்ப்பார். அப்பொழுது ஜன்ம குருவுக்கும் ஜாதக குருவுக்கும் தொடர்பு ஏற்படுகிறது. அது வயதுக்கு ஏற்ற ஒரு சுப நிகழ்வைத் தருகிறது. இதை இன்னும் துல்லியமாகத் தெரிந்து கொள்ள அப்பொழுது நடக்கக்கூடிய தசா புத்தியையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் எனக்கு சுக்கிரதிசை நடந்தபொழுது, இந்த சுப நிகழ்வினை நடத்திக் காட்டினார் குரு. அதே வருடம் ஒரு குழந்தையும் பிறந்தது. அடுத்து, குரு மிதுனத்திற்குச் சென்று ஏழாம் பார்வையாக தனுசு குருவைப் பார்த்தபொழுது, இரண்டாவது குழந்தையும் பிறந்தது. முதல் பார்வையில் திருமணத்தை நடத்திய குரு, இரண்டாம் நிலையில் குழந்தைச் செல்வத்தையும் தந்தது.

இன்னும் ஒரு படி மேலே சென்று சொல்ல வேண்டும் என்றால், ஜாதகத்தில் சில சுப நிகழ்ச்சிகளுக்கான அமைப்பு இல்லாவிட்டாலும்கூட கோசார ரீதியில் சுப அமைப்புகள் வருகின்ற பொழுது ஏதோ ஒரு வகையில் அந்த நிகழ்ச்சிகள் நடந்து விடுகின்றன. ஜன்ம ஜாதக அமைப்பு இந்த சுப நிகழ்ச்சிக்குத் தடையாக இருந்தாலும், ஏதோ ஒரு வகையில் நிகழ்ச்சிகள் நடந்து கோச்சாரத்தில் சுப பலன்கள் குறைகின்ற நேரத்தில் பிரிவும் சங்கடமும் வந்து விடுகிறது.அற்புதமாகத் திருமணம் நடந்து ஓரிரண்டு வருடங்களில் பிரிவினைப் பெறும் ஜாதகங்களில், இந்த கிரக அமைப்புக்களை ஆராய்ந்தால் நமக்கு உண்மை தெரியவரும். இன்னும் சில உதாரணங்களையும் நிகழ்வுகளையும் நெருங்கி பழகியவர்கள் ஜாதகத்திலிருந்தும் சொந்த ஜாதகத்தில் இருந்தும் எடுத்துக் காட்டுகிறேன், அடுத்த இதழில்…

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi