பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் காய்கறி சாகுபடி அதிகமாக உள்ளது. பல்வேறு கிராமங்களில் பந்தல் காய்கறிகளான புடலங்காய்,பாகற்காய் மற்றும் பீர்க்கங்காய் உள்ளிட்டவை அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது.இதில் அதிகப்படியாக புடலங்காய் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழையின்போது, விவசாயிகள் பலர் பந்தல் காய்கறியான புடலங்காய் சாகுபடியில் ஈடுபட்டனர். தற்போது நல்ல விளைச்சலடைந்த புடலங்காய்கள்,பல பகுதிகளில் அறுவடை செய்யப்பட்டு மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுவது தொடர்ந்துள்ளது.
இந்த ஆண்டில் புடலங்காய் விளைச்சல் வழக்கத்தை விட அதிகரிப்பால்,கோடை வெயிலுக்கு முன்னதாக அறுவடை பணியை நிறைவு செய்ய விவசாயிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தற்போது மார்க்கெட்டுக்கு அதன் வரத்து மேலும் அதிகரித்ததுடன் விலை கடுமையாக சரிந்துள்ளது.கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு கிலோ புடலங்காய் ரூ.45 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஒரு கிலோ ரூ.20 முதல் அதிகபட்சமாக ரூ.25 என குறைவான விலைக்கு விற்பனையாவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.