மணிலா: சீனாவின் உரிமை கோரல்களுக்கு இடையே கடல்சார் மண்டலங்களை பாதுகாக்க இரண்டு புதிய சட்டங்களில் பிலிப்பைன்ஸ் அதிபர் கையெழுத்திட்டுள்ளார். இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளின் நிலப்பரப்பை ஆக்கிமித்து வரும் சீனா மறுபுறம் தென்சீன கடல் பரப்பிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதற்கு பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஜப்பான், மலேசியா, தைவான், புருனே உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், இந்த நாடுகளுடன் சீனா மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது.
தென்சீன கடல் எல்லை தொடர்பான வழக்கில் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு ஆதரவாக சர்வதேச தீர்ப்பாயம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தீர்ப்பு வழங்கியது. ஆனால் இதனை பொருட்படுத்தாமல் தென்சீன கடல் பகுதியை சீனா தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்நிலையில் பிலிப்பைன்சின் கடல்சார் மண்டலங்களை சீனாவிடம் இருந்து பாதுகாக்க பிலிப்பைன்ஸ் அரசு கடல்சார் மண்டல சட்டம் மற்றும் தீவுக்கூட்ட கடல்வழி சட்டம் ஆகிய இரண்டு புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளது.
இந்த புதிய சட்டங்களில் பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினான்ட் மார்கோஸ் நேற்று கையெழுத்திட்டார். பிலிப்பைன்சின் புதிய சட்டங்களுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீனாவுக்கான பிலிப்பைன்ஸ் தூதரிடம் சீனா கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இதுகுறித்து சீன வௌியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மாவோ நிங் கூறியதாவது, “புதிய சட்டங்களின்கீழ் சீனாவின் ஹூவாயேன் தீவு, நன்ஷா தீவுகளின் பெரும்பகுதி மற்றும் அதன் கடற்பரப்புகளை பிலிப்பைன்ஸ் கடல்பிரதேசத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதை சீனா உறுதியாக எதிர்க்கிறது” என்று தெரிவித்தார்.