Friday, June 13, 2025
Home செய்திகள்Banner News பல்லுயிர் பெருக்கத்திற்கு பங்காற்றும் கடல் வளம் காப்பதை கடமையாக கருதுவோம்: இன்று உலக பெருங்கடல்கள் தினம்

பல்லுயிர் பெருக்கத்திற்கு பங்காற்றும் கடல் வளம் காப்பதை கடமையாக கருதுவோம்: இன்று உலக பெருங்கடல்கள் தினம்

by Suresh

மனித இனத்தின் வாழ்வாதாரத்திற்கும், பூமியில் உள்ள மற்ற உயிரினங்களின் பல்லுயிர் பெருக்கத்திற்கும், துண்டாடப்பட்டு கிடக்கும் கண்டங்களை ஒன்றிணைப்பதற்கும், உவர் நீர்பரப்பு எனும் கடல் பெரும்பங்கு வகிக்கிறது. அவ்வாறான, கடற்பரப்பு பூமியில் 70.8 சதவீதம் வரை பரந்து விரிந்து பசிபிக், அட்லாண்டிக், அண்டார்டிக், ஆர்டிக் மற்றும் இந்திய பெருங்கடல் என பெயரிட்டு அழைக்கப்படுகிறது. இவற்றை கவுரவிக்கவும், பாதுகாக்கும் விதமாகவும் ஆண்டுதோறும் ‘உலக பெருங்கடல் தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. பெருங்கடல்கள் புவியியல் வேறுபாடுகள் காரணமாக வளைகுடா, விரிகுடா மற்றும் கடல் என மூன்று உவர்நீர் பகுதிகளாக வகைப்படுத்தப்படுகிறது.

கடல்வாழ் உயிரினங்கள் :
உலக கடல்வாழ் உயிரின பதிவுத்துறையின் 2022ம் ஆண்டு தகவலின்படி நுண்ணுயிரி்கள் முதல் திமிங்கலம் போன்ற ராட்சத பாலூட்டிகள் வரை 2.42 லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சியாளர்களால் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தவிர, ஆண்டுதோறும் 1,750 வரையிலான புதிய கடல்வாழ் உயிரினங்கள் பல கட்ட சரிபார்ப்பிற்கு பின் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. அதேநேரம், 70 சதவீத கடல்வாழ் உயிரினங்கள் வகைப்படுத்தப்படவில்லை என, ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

டெக்டானிக் எனப்படும் புவித்தட்டு நகர்வு நிகழ்வினால் கடல்கள் அகன்று பூமியின் ஒரு பகுதியில் சமுத்திரங்களாக மாறுகின்றன. அதேநேரம், வேறொரு பகுதியில் நிலம் பிளவுபட்டு புதிய கடற்பகுதி உருவாகிறது. இவ்வாறு புதிதாக உருவானது தான் செங்கடல். இதன் ஒரு பகுதி இந்திய பெருங்கடலுடன் இயற்கையாகவும், சூயஸ் கால்வாய் வாயிலாக மத்திய தரைக்கடலுடன் செயற்கையாகவும் இணைக்கப்பட்டுள்ளது. புவித்தட்டு நகர்வால் செங்கடல் உருவாகியிருந்தாலும், பசிபிக் பெருங்கடல் ஆண்டுக்கு ஒரு இன்ச் வீதம் குறுகி வருகிறது. அடுத்த 300 மில்லியன் ஆண்டுகளுக்குள் இது முற்றிலும் குறுகி மறைந்து விடும் என, ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.

கடல் மட்டும் கிடுகிடு :
இதுஒருபுறமிருக்க புவி வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றத்தால் கடல்மட்டம் ஆண்டுதோறும் 8 முதல் 9 இன்ச் வரை அதிகரித்து வருவதாக அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. பனிப்பாறைகள் உருகுதல், அளவுக்கதிமாக நிலத்தடி நீர், பெட்ரோல் உறிஞ்சுதல், கடலோர கட்டுமானங்கள், ஓசோன் பாதிப்பு ஆகியவற்றால் துருவ பகுதிகளில் உள்ள கடல்மட்டம், 2023ல் மட்டும் 4 இன்ச் அளவிற்கு அதிகரித்துள்ளது.

உயிரினங்கள் பாதுகாப்பு :
பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் அட்டவணைப்படி, இறைச்சிக்காக வேட்டையாடப்பட்ட ஸ்டெல்லார் கடல் பசுக்கள் 1768, இறைச்சி மற்றும் எண்ணெய்க்காக வேட்டையாடப்பட்ட கரீபியன் துறவி சீல்கள் 2008, வாக்குய்ட்டா எனும் டால்பின்கள் தடை செய்யப்பட்ட இரட்டை மடி மீன் வலைகளில் சிக்கி 2020ம் ஆண்டும் முற்றிலுமாக அழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பில் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்திய அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. இந்திய வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அமைச்சகத்தின் சார்பில், அழிந்து வரும் கடல் உயிரினங்களை அட்டவணைப்படுத்தி அவற்றை வேட்டையாடுவது, பிடிப்பது ஆகியவற்றை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்து பாதுகாத்து வருகிறது.

பாதுகாப்பு மண்டலம் :
தமிழகத்தை பொறுத்தவரை மன்னார் வளைகுடா பகுதி பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடல் வாழ்விட இழப்பு காரணமாக அழிந்து தீபகற்ப இந்தியாவின் கடற்பரப்பில் வெறும் 240 என்ற எண்ணிக்கையில் மட்டுமே இருக்கும் கடற்பசுக்களை பாதுகாக்க, 2022ல் இந்தியாவின் முதல் கடல்பசு பாதுகாப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனுடன் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈர நிலங்களை பாதுகாக்கும்விதமாக வழங்கப்படும் ராம்சார் தலங்களுக்கான குறியீட்டையும் தமிழகம் பெற்றுள்ளது. நாட்டிலுள்ள 91 ராம்சார் தலங்களில் தமிழகத்தில் தான் அதிகபட்சமாக 20 தலங்கள் உள்ளன. அவற்றில் கடைசியாக இணைக்கப்பட்டவை சக்கரக்கோட்டை மற்றும் தேர்தங்கல் பறவைகள் சரணாலயங்களாகும். இதனுடன், கடல் அட்டை, கடல் ஆமை, கடல் குதிரை, வலம்புரி சங்கு என எண்ணற்ற கடல்வாழ் உயிரினங்கள் வனத்துறையின் பட்டியலில் இணைத்து பாதுகாக்கப்படுகிறது.

பல்லுயிர் பெருக்கம் முதல் மனித இனத்தின் இன்றியமையாத தேவையான ஆக்சிஜனை கடற்பரப்பில் வளரும் மிதவைபாசிகள், கடற்பாசிகள், கடற்புற்கள், பவளப்பாறைகள் மற்றும் மாங்குரோவ் காடுகள் ஆகியவற்றை கொண்டு 50 சதவீதம் வரை கடல் உற்பத்தி செய்கிறது. எனினும், நிலத்தில் உள்ள அனைத்து வகை மாசுக்கள், ரசாயன பொருட்கள், மழைநீர் ஆகியவை ஆறுகள் வாயிலாக கடலில் சென்று கலப்பதால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. 1912ல் ஜப்பானின் டோயமா நகர ஜின்சு நகர படுகையில் காட்மிய கழிவுகளால் ஏற்பட்ட பேரிடர் மற்றும் 1956ல் மினமாட்டா நகரில் காரீய தாது கழிவுகளால் ஏற்பட்ட பேரழிவு ஆகியவை கடல் மாசுபாட்டின் பின் விளைவுகளுக்கான சாட்சிகளாகும். இவற்றை ஆதரமாக வைத்து, நமக்கு கிடைத்த கடல்வளங்கள் அனைத்தும் அடுத்த தலைமுறையினருக்கும் கிடைக்கும்விதமாக, கடற்பரப்பை பாதுகாப்பதே நம் ஒவ்வொருவரும் இயற்கைக்கு செய்யும் தார்மீக கடமையாகும்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi