சோழிங்கநல்லூர்: மெரினா காமராஜர் சாலையில் சென்ற ஆட்டோவை காவலர் ஒருவர் திடீரென வழிமறித்து தடுத்ததால் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளனது. இதில், ஆட்டோவில் பயணம் செய்த 5 வயது சிறுவன் தலையில் அடிபட்டு துடிதுத்து உயிரிழந்தான். இதையடுத்து ஆட்டோவை வழிமறித்து தடுத்த காவலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை திருவல்லிக்கேணி மாட்டங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (58), ஆட்டோ டிரைவர்.
ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தோறும் தனது 5 வயது பேரன் அலோக்நாத் தக்சனுடன் மெரினா கடற்கரைக்கு வந்து செல்வதும் வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் மாலை பேரன் மற்றும் மனைவியுடன் சேகர் தனது ஆட்டோவில் மெரினா கடற்கரைக்கு வந்தார்.
பின்னர் பேரனுடன் சிறிது நேரம் மணல் பரப்பில் விளையாடிவிட்டு, மீண்டும் சேகர் பேரனை ஆட்டோவில் வீட்டிற்கு அழைத்துச்சென்றார். மெரினா கண்ணகி சிலை அருகே ஆட்டோ செல்லும் போது, திடீரென காமராஜர் சாலையில் பாதுகாப்பு பணியில் இருந்த மகேந்திரன் என்ற காவலர் ஆட்டோவை திடீரென வழிமறித்துள்ளார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத சேகர் ஆட்டோவை சட்டென்று பிரேக் பிடித்து நிறுத்தினார். நிலை தடுமாறிய ஆட்டோ காவலர் மகேந்திரன் மீது இடித்தப்படி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த சிறுவன் ரத்த வெள்ளத்தில் மயங்கினான். இதை பார்த்த அவரது தாதா சேகர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ஆனால் சிறுவன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக பரிசோதனை செய்த டாக்டர்கள் தெரிவித்தனர். அதை கேட்டு சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுது துடித்தனர். விபத்தில் ஆட்டோ ஓட்டி வந்த சேகர் மற்றும் ஆட்டோவை இடைமறித்த காவலர் மகேந்திரன் காயமடைந்தனர். பின்னர் சம்பவம் குறித்து அண்ணாசதுக்கம் போக்குவரத்து போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.
அதில், சாலையில் சென்ற ஆட்டோவை காவலர் திடீரென வழிமறித்து நிறுத்தியதால் விபத்து ஏற்பட்டதாகவும், இதனால் சிறுவன் காயமடைந்து உயிரிழந்ததும் தெரியவந்தது.
அதைதொடர்ந்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் ஆட்டோவை வழிமறித்து தடுத்த ஆயுதப்படை காவலர் மகேந்திரன் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலர் மகேந்திரன் காயம் காரணமாக ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை முடிந்த உடன் போலீசார் காவலர் மகேந்திரனை கைது செய்வார்கள் என்று கூறப்படுகிறது. இந்த விபத்தால் சிறிது நேரம் மெரினா காமராஜர் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.