சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நீச்சல் குளம் அருகே நேற்று காலை 9.30 மணிக்கு கேட்பாரற்று கட்டை பை ஒன்று கிடந்தது. அந்த பையை நாய்கள் அங்கும் இங்குமாக இழுத்து சென்றன. இதனால், மெரினா கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் என்னவென்று அருகில் சென்று பார்த்தபோது, கட்டை பையில் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை இறந்த நிலையில் கிடந்தது. குழந்தையின் கையில், மருத்துவமனையில் பிறந்ததற்கான அடையாள அட்டை இருந்தது.
இதுகுறித்து பொதுமக்கள் அண்ணாசதுக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில், இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையிலான போலீசார் அங்கு வந்து, குழந்தையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், குழந்தை சடலத்தை அங்கு வீசி சென்ற நபர்கள் யார் என மெரினா நீச்சல் குளம் அருகே உள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். அதில், வாலிபர் ஒருவர் கையில் கொண்டு வந்த கட்டை பையை அங்கு வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. உடனே போலீசார் குழந்தையின் கையில் இருந்த மருத்துவமனை அடையாள அட்டையை வைத்து விசாரணை நடத்தினர். அதில், கொட்டிவாக்கம் பகுதியை சேர்ந்த சுரேஷ் மற்றும் சாந்தி தம்பதியின் குழந்தை என தெரியவந்தது. சாந்தி திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபா காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு நேற்று முன்தினம் இரவு பெண் குழந்தை இறந்து பிறந்துள்ளது. இதனால் மருத்துவர்கள் குழந்தையை அடக்கம் செய்ய பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால் கூலித்தொழிலாளியான சுரேஷ் குழந்தை சடலத்தை அடக்கம் செய்ய பணம் இல்லாததால் வேறு வழியின்றி மெரினா நீச்சல் குளத்தின் அருகே வீசி சென்றது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார், சுரேஷை பிடித்து அவரிடம் குழந்தையின் உடலை ஒப்படைத்து இறுதி சடங்கு செய்வதற்கான உதவிகளை செய்து அனுப்பி வைத்தனர். மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபட கூடாது என்று கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.