சென்னை: மெரினா சர்வீஸ் சாலையில் வழக்கம் போல் நேற்று காலை பொதுமக்கள் நடைபயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது கார் ஒன்று மின்னல் வேகத்தில் சீறி பாய்ந்தது. இதை பார்த்து சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்ட பொதுமக்கள் அச்சத்தில் மணல்பரப்புக்கு ஓட்டம் பிடித்தனர். அந்த வழியாக வந்த ஆயுதப்படை காவலர் ஒருவர் இதை பார்த்து, அந்த காரை தடுத்த நிறுத்தும் வகையில் காரின் முன்பு தனது பைக்கை நிறுத்தி காரை ஓட்டிய நபரை பிடிக்க முயன்றார்.
ஆனால் காரை ஓட்டிய வாலிபர் காவலரை கண்டதும் வாகனத்தை பின்பக்கமாக வேகமாக இயக்கி பிறகு மோதுவது போல் அதிவேகமாக காமராஜர் சாலையை நோக்கி ெசன்றார். பிறகு மீண்டும் காமராஜர் சாலையில் இருந்து மெரினா சர்வீஸ் சாலையில் மின்னல் வேகத்தில் வந்தார். அப்போது காவலர் தடுப்புகளை போட்டு காரை தடுக்க முன்றார். ஆனால் கார் மின்னல் வேகத்தில் சர்வீஸ் சாலை வழியாக சென்றுவிட்டது.வாலிபரின் சாகச வீடியோ மெரினா கடற்கரையில் நடைபயிற்சியில் ஈடுபட்ட பொதுமக்களில் சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
பின்னர் சம்பவம் குறித்து அண்ணாசதுக்கம் போக்குவரத்து போலீசார் கார் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்திய போது மயிலாப்பூரை சேர்ந்த அபிஷேக் மற்றும் அவரது மனைவி நந்தினி என தெரியவந்தது. இவர்களை போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் கடற்கரைக்கு தனது மனைவியுடன் வந்த போது, காரை விளையாட்டாக வேகமாக இயக்கியதாகவும், அப்போது காவலர் காரை தடுத்து நிறுத்தியதால், பதற்றமடைந்து என்ன ெசய்வது என்று தெரியாமல் அதிவேகத்தில் காரை இயக்கி அங்கிருந்து தப்பி வந்ததாக தெரியவந்துள்ளது. இருந்தாலும் போலீசார் தம்பதியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.