* ஐ-டெக் லேப் முதல் ஸ்மார்ட் கிளாஸ் வரை;
* அரசின் கட்டமைப்பால் மாணவர் எதிர்காலத்துக்கு பலமான அஸ்திவாரம்;
சென்னை: தமிழ்நாட்டு குழந்தைகள் எல்லோரும் கல்வி கற்கவேண்டும், உயர் படிப்புகளுக்கு போகவேண்டும். ஏனென்றால், ஒரு காலத்தில் கல்வி நமக்கு இங்கே எட்டாக்கனியாக இருந்தது. அதன்படி, கல்வி நம் எல்லோருக்கும் சுலபமாக கிடைக்கவில்லை. இன்றைக்கு நாம் எல்லோரும் படிக்கிறோம் என்றால், அதற்கு பின்னால், நம்முடைய முன்னோர்கள் நடத்திய ஏராளமான போராட்டங்கள்தான் காரணமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் கல்வி முன்னேற்றத்திற்காக அரசு செய்த பல்வேறு முன்னெடுப்பின் காரணமாக தற்போது ‘விளிம்பு நிலை மக்களிடையே கல்வி புரட்சி’ ஏற்பட்டுள்ளதற்கு அவர்களின் வளர்ச்சியே சாட்சியாக உள்ளது.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் மட்டும் 28 லட்சம் ஆதிதிராவிட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அவர்களுக்கான கல்வி உதவி தொகை, கற்பிப்பு கட்டணம், தேர்வு கட்டணங்களில் இருந்து விலக்கு, விலையில்லா கல்வி உபகரணங்கள் வழங்குதல் போன்ற நலத்திட்டங்களால் பல லட்சம் ஆதிதிராவிடர் மாணக்கர்கள் பயன்பெற்று வருகின்றனர். அதேபோல், பழங்குடியின மாணவர்களை பொறுத்தவரை உண்டு உறைவிட பள்ளிகளில் 24,439 மாணவர்களும், ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட பள்ளிகளில் 2,478 மாணக்கர்கள் படித்து வருகின்றனர். அந்தவகையில், சமீபத்தில் வெளியான 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் இதுவரை இல்லாத வகையில் 95 விழுக்காடு வரை மாணக்கர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் லஷ்மி பிரியா கூறியதாவது: ‘கல்வி மட்டுமே நம்மை சிறந்த மனிதர்களாக்கும். இதுவே, சமூக மற்றும் பாலின சமத்துவத்திற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கும் கருவியாகும்’’ என நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியாசென் கூறுகிறார். அந்தவகையில் சமூக சமத்துவத்தினை மீட்டெக்கும் பொருட்டு கல்விக்காக பல்வேறு முன்னெடுப்புகளை ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணாக்கர்களிடையே அரசு மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, மாணாக்கர்களின் நலன் கருதி அவர்களின் திறன்களை வளர்த்து, கனவை வென்று வாழ்வில் உன்னத நிலைக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கும் வகையில் நல்லோசை திட்டம், களமாடு திட்டம், எனக்கு ஒரு கனவு இருக்கிறது திட்டம் போன்றவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுமட்டுமின்றி, பள்ளிகளில் ஐ-டெக் லேப் முதல் ஸ்மார்ட் கிளாஸ் வரை அரசின் கட்டமைப்பால் மாணவர்களின் எதிர்காலம் அஸ்திவாரமிட்டு வருகின்றன. அதற்கு உதாரணமாகத்தான், நடந்து முடிந்த பொதுத்தேர்வில் பழங்குடியின மாணாக்கர்கள் 95 சதவீதம் வரை தேர்ச்சியடைந்து சாதனை படைத்துள்ளனர்.
தமிழகத்தில் பழங்குடியின மக்களின் பாரம்பரியத்தை பின்பற்றி கல்வி அறிவு விகிதத்தினை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் உணவு மற்றும் தங்கும் வசதிகளுடன் கூடிய அரசு உண்டி உறைவிட பள்ளிகள் இயங்குகின்றன. இதில் 212 தொடக்க பள்ளிகள், 49 நடுநிலை பள்ளிகள், 31 உயர்நிலைப்பள்ளிகள், 28 மேல்நிலை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர, 8 ஏகலைவா மாதிரி பள்ளிகள் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை இயங்கி வருகின்றன. அதன்படி, இந்தாண்டு நடந்து முடிந்த 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் இப்போது இல்லாத வகையில் 95 சதவீதம் விழுக்காட்டை பெற்றுள்ளோம்.
கடந்த 2022ம் ஆண்டு 80 சதவீதம் இருந்ததை தற்போது 15 சதவீதம் உயர்த்தி உள்ளோம். இந்த விகிதாச்சாரத்தை பெற தினசரி காலை மற்றும் மாலை வகுப்புகள், குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி தவிர்த்து 500க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் உழைப்பும் இதில் அடங்கி உள்ளது. மாணவர்களும் அதற்கு ஏற்றால் போல, தாங்கள் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையிலும், அதிக மதிப்பெண் பெறும் வகையிலும் தகுதிப்படுத்திக் கொண்டனர். ஊர் கூடி தேர் இழுப்பது போல, அனைவரின் ஒத்துழைப்பால் தற்போது இந்த இலக்கை நெருங்கியுள்ளோம். இன்னும், மாணக்கர்களை மெருகேற்றும் விதமாக பல பயிற்சிகள் அளிக்கப்பட்டு அடுத்தாண்டு 100 சதவீத தேர்ச்சி என்ற இலக்கை நிச்சயம் நிறைவேற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
* முதல் மாணவி சொல்வது என்ன?
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாட்டிலேயே அதிக மதிப்பெண் எடுத்த பழங்குடியின மாணவி பிரியதர்ஷினி பேட்டி: சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னவேலாம்பட்டி எனது சொந்த ஊர். என்னுடைய அப்பா கரியராமன் மற்றும் அம்மா தமிழ் செல்வி இருவரும் விவசாய தொழில் செய்துவருகின்றனர். வாழப்பாடி வட்டம் அருநூத்துமலையில் உள்ள அரசு பழங்குடியின உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயின்று வந்தேன். தினசரி 2 கிலோமீட்டர் மலைப்பாதைகளுக்கு இடையே நடந்து சென்று பின்னர் பேருந்து ஏறி பள்ளிக்கு செல்வேன்.
பொதுத்தேர்வை எதிர்கொள்ள எனது பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர் கதிர் ஆகியோர் உறுதுணையாக இருந்தனர். 12ம் வகுப்பு தேர்வில் 600க்கு 560 மதிப்பெண் பெற்றேன். என்னுடைய மதிப்பெண் தான் இந்தாண்டுக்கான தமிழ்நாட்டில் பழங்குடியின மாணாக்கர்களில் முதலிடம் வந்தது என்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். இந்த வெற்றிக்கு என் உழைப்பு மட்டுமின்றி, ஆசிரியர்களின் ஊக்குவிப்புகளும், அரசின் நலத்திட்டங்களும் படிக்கல்லாய் அமைந்திருந்தன. என்னுடைய விருப்பம் நீதிபதி ஆவதுதான். அதற்காக தான் சென்னை தரமணியில் உள்ள சட்டக்கல்லூரி படிப்பதற்கு விண்ணப்பித்துள்ளேன் என கூறினார்.
* உயர்கல்வி நுழைவு தேர்வுகளுக்கான பயிற்சி
பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகள் மற்றும் ஏகலைவா மாதிரி பள்ளிகளில் JEE, CLAT, NIFT, NEET, IISER,IMU மற்றும் CUET போன்ற உயர்கல்விக்கான நுழைவு தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் செங்கல்பட்டு மாவட்டம், குமிழி ஏகலைவா மாதிரி பள்ளியில் நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த 3 மாதங்களில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற்று திருச்சி என்ஐடி, சென்னை மற்றும் பெங்களூருவில் நிப்ட், அரசு மருத்துவக்கல்லூரி, தேசிய சட்டப்பல்கலைக்கழகம், சர்தார் வல்லபாய் பட்டேல் பன்னாட்டு நெசவு மற்றும் மேலாண்மை பள்ளி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் படித்து வருகின்றனர். அதன்படி, இந்தாண்டுக்கான JEE, NEET பயிற்சி வகுப்புகளில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.
* 2025-26 கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்றோர் விவரம்
வருடம் மாணவர்கள் எண்ணிக்கை தேர்வு
எழுதியவர்கள் தேர்ச்சி
பெற்றவர்கள் 390க்கு கீழ் பெற்றவர்கள் 390க்கு மேல் பெற்றவர்கள்
2022 1662 1471 1271 1306 165
2023 1963 1553 1464 1117 436
2024 1410 1325 1252 939 386
2025 1512 1512 1444 917 595