தானே: மராட்டிய மாநிலம் தானேவில் ராட்சத கிரேன் இயந்திரம் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தின் ஷாஹாபூர் தாலுக்காகவிற்கு உட்பட்ட சர்லம்பே கிராமத்திற்கு அருகில் சம்ருத்தி விரைவுச்சாலையின் மூன்றாம் கட்ட கட்டுமானப் பணிகள் நடைபெற்று கொண்டு இருந்தன. இந்த கட்டுமான பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது நள்ளிரவு எதிர்பாராத விதமாக பணியில் ஈடுபட்டு இருந்த ராட்சத கிரேன் திடீரென சரிந்து விழுந்தது. இந்த கோர விபத்தில் 17 கட்டுமான தொழிலாளர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த மூன்று தொழிலாளர்கள் ஷாஹாபூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்புப்படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளில் சிக்கி இருந்த 5 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்ட மீட்புப் படையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து ஷாஹாபூர் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்க உத்தரவிட்டார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்க மராட்டிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டார்.