நாகர்கோவில் : கன்னியாகுமரி அருகே கோவளத்தில் டால்பின், கடல் ஆமை விளக்க மையம் அமைக்கப்பட உள்ளதாக வனத்துறை அதிகாரி பிரசாந்த் கூறினார். மேலும் மாறாமலை, ஆனை நிறுத்தி மலைகளில் மலையேற்ற சுற்றுலாவுக்கு அனுமதிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். குமரி மாவட்டம் வனம் மற்றும் கடல், மலைகள் நிறைந்து உள்ளதால் மிகப்பெரிய சுற்றுலா தலமாக உள்ளது. இங்குள்ள மலை பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார பகுதி ஆகும். இந்த மாவட்டத்தில் பேச்சிப்பாறை, மோதிரமலை, ஆறுகாணி, பத்துகாணி, மணலோடை, மாறாமலை உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மலையோர பகுதிகள் உள்ளன.
இங்குள்ள காடுகளில் பல்வேறு வகையிலான உயிரினங்களும், மூலிகைகளும் நிறைந்துள்ளன. இதே போல் இங்குள்ள கடல்களில் அரிய வகை மீன் வகைகள் உள்ளது. ஆழ்கடல் மீன் பிடிப்பு பகுதியாகவும் குமரி மாவட்ட கடற்கரை பகுதிகள் உள்ளன. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 40க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ள கடற்கரை பகுதிகள் இயற்கையாகவே அழகை தன்னகத்தே கொண்டு உள்ளன. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி முக்கடலும் சங்கமிக்கும் பகுதியாக உள்ளது.
ஆயிரக்கணக்கான பயணிகள் நாள் தோறும் வந்து செல்கிறார்கள். சொத்தவிளை, சங்குதுறை, லெமூர் பீச், முட்டம், தேங்காப்பட்டணம் உள்ளிட்ட பல்வேறு அழகிய கடற்கரைகள் உள்ளன. இந்த மாவட்டத்தில் சுற்றுலா மேம்பாட்டுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் கன்னியாகுமரியில் நடுக்கடலில் உள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு பாறை இடையே கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கன்னியாகுமரியின் புதிய அடையாளமாக கண்ணாடி பாலம் மாறி இருக்கிறது. மேலும் படகு போக்குவரத்து வசதிக்காக மேலும் 3 புதிய படங்குகள் வாங்கப்பட உள்ளன. இதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தொடங்கி உள்ளது. சமீபத்தில் முட்டம் கடற்கரையும் சுமார் 1 கோடியில் அழகுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் அடுத்த கட்டமாக வனத்துறை சார்பிலும் வன சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இது குறித்து மாவட்ட வனத்துறை அதிகாரி பிரசாந்த், நேற்று நிருபர்களிடம் கூறுகையில், குமரி மாவட்டத்தில் இஞ்சிக்கடவு மற்றும் பாலமோர் ஆகிய பகுதிகளில் மலையேற சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. ரூ.3 லட்சம் வரை வருமானம் கிடைத்துள்ளது. தற்போது கோடைக்காலம் என்பதாலும், அடிக்கடி மலையில் தீ விபத்துக்கள் நிகழ்ந்ததாலும், மலையேற அனுமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
அடுத்த கட்டமாக மாறாமலை மற்றும் ஆனைநிறுத்தி ஆகிய இடங்களில் மலையேற்ற சுற்றுலா அனுமதிக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் நடக்கின்றன. இதே போல் கன்னியாகுமரி அருகே உள்ள கோவளத்தில் டால்பின் மற்றும் கடல் ஆமைகள் குறித்த விளக்க மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. திறந்த வெளி திரையரங்கு அமைக்கப்பட்டு கடல் வளம் மற்றும் வன வளம் குறித்த திரைப்படங்கள் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளும் இங்கு எடுக்கப்படும். டால்பின், ஆமை விளக்க மையம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் வகையில் அமையும் என்றார்.