சென்னை: மாமல்லபுரத்தில் கடந்த 2013ல் வன்னியர் சங்கத்தினர் நடத்திய சித்திரை திருவிழாவின்போது, மரக்காணத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன. பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் தீவைக்கப்பட்டன. பா.ம.க.வினர் போராட்டம் காரணமாக 2013 ஏப்ரல் 25ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 12 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை பா.ம.க.விடம் வசூலிப்பது தொடர்பாக தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இந்த விசாரணை தமிழ்நாடு பொது சொத்து சேதம் தடுப்பு சட்டத்தை பின்பற்றி நடத்தப்படவில்லை எனக் கூறி, இது சம்பந்தமாக இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை கோரி பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில், இழப்பீட்டை தீர்மானிக்கும் முன்பு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதா என்று ஆரம்பகட்ட விசாரணை நடத்த உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. அதை பின்பற்றாமல் இழப்பீடு குறித்து முடிவு செய்யும் விசாரணையை நடத்த கூடாது. இழப்பீடு கோரி டாஸ்மாக் நிர்வாகம், போக்குவரத்து கழகங்கள் அளித்த விண்ணப்பங்களை நிராகரிக்க வேண்டும். சட்ட விதிகளை பின்பற்றி விசாரணை நடத்தாமல் இழப்பீடு குறித்து இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வெறும் அச்சத்தின் அடிப்படையில், வருவாய் நிர்வாக ஆணையரின் விசாரணையை தடுக்கும் நோக்கில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும், சட்ட விதிகளின்படியும் விசாரணை நடத்தப்படும் என்று அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் உறுதியளித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, உயர் நீதிமன்ற உத்தரவின்படி விசாரணையை நடத்தி 8 வாரங்களில் இறுதி உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.