*கண்டுகொள்ளாத அதிகாரிகள்
மரக்காணம் : மரக்காணம் பேரூராட்சியில் உள்ள பேருந்து நிலையம் மற்றும் காவல் நிலையம் அருகில் உள்ளது ஆண்டி குளம். இந்தக் குளம் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரிய குளமாகவே இருந்தது. இந்தக் குளம் அமைந்துள்ள பகுதி மரக்காணம் பேரூராட்சியின் மையப் பகுதியாகும்.
இதனால் இதில் நீர் நிரம்பினால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடும் இல்லாமல் இருந்தது. இந்தக் குளம் ஆரம்ப காலத்தில் பொது மக்களின் பயன்பாடாகவும்இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 20 ஆண்டுக்கு முன் இப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில்ஆரம்பமானது. இதன் காரணமாக இந்த குளம் உள்ள பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் பல கோடி அளவிற்கு விற்பனையாகிறது.
இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஒரு சில தனி நபர்கள் இந்த குளத்தினை ஆக்கிரப்பு செய்து விட்டனர். இந்த ஆக்கிரமிப்பினால் தற்பொழுது குளத்தின் பரப்பளவு வெகுவாக குறைந்து சிறிய பள்ளம் போல் காணப்படுகிறது.
நீர் ஆதாரங்கள் உள்ளப் பகுதிகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்றி அந்த இடத்தினை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டுமென தொடர்ந்து நீதிமன்றங்கள் கூறுகின்றன. ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய அதிகாரிகள் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பகுதி பொதுமக்கள் குறை கூறுகின்றனர்.
மேலும் இந்தக் குளத்தின் அருகில் இருக்கும் வீடுகளில் உள்ள கழிவுகளையும் நேரடியாகவே இந்தக் குளத்தில் விட்டு விடுகின்றனர். இதன் காரணமாக இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது.
இதுபோல் இந்தக் குட்டையில் தேங்கியிருக்கும் கழிவு நீரிலிருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி பொது மக்களை தாக்குகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் உண்டாகும் அபாய நிலை உள்ளது.
எனவே இப்பகுதி பொதுமக்களின் நலன் கருதி மரக்காணம் ஆண்டி குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.