சென்னை: சென்னை மறைமலை நகரை சேர்ந்த மோகன் இணை நோயுடன் சேர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் உயிரிழந்துள்ளார் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.சென்னை அடுத்த மறைமலை நகரை சேர்ந்த 60 வயதான மோகன் சிறுநீரக கோளாறு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளிட்ட காரணத்தால் சிகிச்சைக்காக சில தினங்களுக்கு முன்னர் கே.கே. நகரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேல் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல திட்டமிட்டனர். ஆனால் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே மோகன் உயிரிழந்துள்ளார்.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: 60 வயது நபர் நீரிழப்பு மற்றும் இரைப்பை குடல் அழற்சி காரணமாக கே.கே.நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்கனவே நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரகம் செயலிழந்து இருந்தது. சிறுநீரக செயலிழப்புக்காக டயாலிசிஸ் மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடந்து கடந்த 26ம் தேதி அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 27ம் தேதி அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.