ஐதராபாத்: தெலங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் தேசிய மஞ்சள் வாரிய தேசிய தலைமை அலுவலகத்தை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று திறந்து வைத்தார். விழாவில் அமிஷ் ஷா பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூர் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்னமும் கேள்விகளை எழுப்பி வருகிறார். எங்களை கேள்வி கேட்பதற்கு முன் பாகிஸ்தான் எந்த அளவுக்கு பலவீனமாக காட்சியளிக்கிறது, அதற்கு காரணம் ஆபரேஷன் சிந்தூரின்போது நாங்கள் துல்லியமாக தாக்குதல் நடத்தியதுதான் என்பதை அவர் பார்க்க வேண்டும்.
மாவோயிஸ்ட்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கூறுகிறது.
ஆயுதமேந்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்பது எங்கள் கொள்கை. மாவோயிஸ்ட்கள் ஆயுதங்களை ஒப்படைத்து, சரணடைய வேண்டும். மற்றவர்களை போல் வாழ வேண்டும். வடகிழக்கில் சுமார் 10 ஆயிரம் பேர் ஆயுதங்களை ஒப்படைத்துள்ளனர். அவர்களில் சிலர் தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆகிவிட்டனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 2 ஆயிரம் மாவோயிஸ்ட்கள் சரணடைந்துள்ளனர். மற்றவர்களும் சரணடைய வேண்டும். அப்படி செய்யாவிட்டால், அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் மாவோயிஸ்ட்கள் நாட்டில் இருந்தே ஒழிக்கப்படுவார்கள். இவ்வாறு அமித் ஷா பேசினார்.