காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடந்த, ஓலைச்சுவடிகள் குறித்து பாதுகாப்பு கருத்தரங்கத்தில், ‘புது தொழில் நுட்பத்தையும், நமது கலாச்சாரத்தையும் ஒருசேர கற்பிக்கும் இடமாக காஞ்சிபுரம் உள்ளது’ என ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். காஞ்சிபுரத்தில் சந்திர சேகரேந்திர சரஸ்வதி வித்யாலயா பல்கலையில், ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் உள்ளது.
இம்மையத்தில் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு குறித்து கருத்தரங்கம் நேற்று நடந்தது. பல்கலையின் வேந்தர் குடும்ப சாஸ்திரி தலைமை வகித்தார். நிர்வாக அறங்காவலர் செல்லா.விஸ்வநாத சாஸ்திரி, அறங்காவலர்கள் பம்மல்.விஸ்வநாதன், சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வேந்தர் ஜி.ஸ்ரீநிவாசு வரவேற்று பேசினார். இதில், ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துகொண்டு, பல்கலையில் பயிலும் சிற்பக்கலை மாணவர்களின் சிற்பங்கள், ஓவியங்கள் மற்றும் பல நூறு ஆண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள் பாதுகாப்பகம் ஆகியனவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதன் பேசியதாவது: காஞ்சிபுரத்துக்கும், ஒரிசாவுக்கும் வரலாற்று ரீதியான தொடர்பு இருந்துள்ளது. காஞ்சிபுரத்தில் பழங்காலத்தில் மிகப்பெரிய பல்கலைக்கழகம் அமைந்திருந்தது. புது தொழில் நுட்பத்தையும், நமது கலாச்சாரத்தையும் ஒருசேர கற்பிக்கும் இடமாக காஞ்சிபுரம் சந்திர சேகரேந்திர சரஸ்வதி வித்யாலயா இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
சுமார், 30 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி சங்கராச்சாரியார் எதிர்கால தொழில்நுட்பம் மற்றும் பண்பாட்டு ரீதியிலான கல்வியின் தேவையை அறிந்து.
இப்பல்கலையை அவர் தொடங்கியிருக்கிறார். பொதுவாக மேற்கத்திய நாடுகளிலிருந்து தான் அனைத்து கண்டுபிடிப்புகளும் வந்தன என்ற ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், நாட்டிலேயே பழங்காலத்தில் இரும்பு பொருட்கள், செம்பு, துத்தநாகம் ஆகியனவற்றிலும் அணிகலன்கள் செய்யப்பட்டுள்ளது. தமிழ் உட்பட பல மொழிகளிலிருந்தும் சமஸ்கிருதம் எழுதுவதற்காக உருவாக்கப்பட்ட எழுத்து முறையே கிரந்தம் என இப்பல்கலைக்கு வந்த பிறகுதான் தெரியவந்தது.
அறிவியல் ரீதியான சிந்தனையின்றி இவையெல்லாம் நடந்திருக்க முடியாது. தென்னாட்டில் கேரள மாநிலம் காலடியில் தோன்றிய ஆதிசங்கரர் பாரத தேசம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து 4 திசைகளிலும் மடங்களை நிறுவி இறுதியில் காஞ்சியில் பீடமேறினார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் பணி ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சேது ராமச்சந்திரன், பல்கலையின் நெறியாளர் கே.வெங்கட் ரமணன், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ – மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிறைவாக, உதவி பேராசிரியர் தேவஜ்யோதி ஜெனா நன்றி கூறினார். முன்னதாக, அமைச்சர் தர்மேந்திர பிரதான், காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.