மானூர் : மானூர் அடுத்த எட்டான்குளம் அருகே வீட்டின் முன்பாக செல்போனில் விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுவன் பாம்பு கடித்ததில் பரிதாபமாக இறந்த சம்பவம் தீராத சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம், மானூர் அருகேயுள்ள லெட்சுமியாபுரத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (43). கூலி தொழிலாளி. இவரது மனைவி அன்னபாக்கியம். தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை மற்றும் இரு ஆண் குழந்தைகள்.
எட்டாங்குளம் டாஸ்மாக் கடையருகே இசக்கிமுத்து புதிதாக வீடு கட்டி குடியிருந்து குடும்பத்துடன் குடியேறினார். இந்நிலையில் முதலாம் வகுப்பு படித்து வந்த இவரது மகன் இஸ்வந்த் (6) நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் வீட்டின் முன்புற முற்றத்தில் பிளாஸ்டிக் சேரில் உட்கார்ந்து கொண்டு கால்களை கீழே தொங்கவிட்ட நிலையில் செல்போனில் விளையாடிக்கொண்டிருந்தார்.
அதேவேளையில் வீட்டுவாசலில் இசக்கிமுத்து மற்றொரு செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த பாம்பு ஒன்று, செல்போனில் விளையாடிக்கொண்டிருந்த மகன் இஸ்வந்த் காலில் கடித்துவிட்டு சென்றது.
இதனால் வேதனை அடைந்த சிறுவன் பாம்பு கடித்தது குறித்து கூறியதோடு சத்தம்போட்டு அழத்துவங்கினான். இதைப் பார்த்து பதறிய இசக்கிமுத்து, பாம்பு கடித்ததால் காலில் ரத்தம் சொட்டிக்கொண்டிருந்த மகனை மீட்டதோடு பைக்கில் மானூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டுசேர்த்தார்.
அங்கு அளிக்கப்பட்ட முதலுதவியை தொடர்ந்து சிறுவனை மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.