ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடந்த ஹாக்கிப் போட்டி, இந்திய அணி சார்பாக ஆடிய நட்சத்திர வீரர் மன்பிரீத் சிங்கிற்கு 400வது போட்டியாக அமைந்தது. இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஹாக்கி இந்தியாவின் தற்போதைய தலைவருமான திலீப் திர்க்கி, அதிகபட்சமாக 412 போட்டிகளில் ஆடிய வீரர் என்ற சாதனைக்கு உரியவராக திகழ்கிறார். அந்த சாதனையை விரைவில் முறியடிக்கக் கூடிய வீரராகவும், இந்திய அணிக்காக 400 போட்டிகளில் ஆடிய 2வது வீரராகவும் மன்பிரீத் சிங் உருவெடுத்துள்ளார்.
சர்வதேச அளவில், 400 போட்டிகள் ஆடிய 8வது வீரர் என்ற பெருமையும் மன்பிரீத் சிங்கிற்கு கிடைத்துள்ளது. நேற்றைய போட்டி முடிந்த பின்னர், மன்பிரீத் சிங்கிற்கு சக வீரர்கள் உரிய மரியாதை செலுத்தி கவுரவப்படுத்தினர். தவிர, 400 போட்டிகளில் ஆடியதற்கான நினைவுப்பரிசாக, கையெழுத்திடப்பட்ட டிசர்ட்டை ஆஸி அணியினர் வழங்கினர். மன்பிரீத் சிங், 2011ல், தனது 19வது வயதில் முதல் முறையாக இந்திய அணிக்காக ஹாக்கி போட்டியில் ஆடினார்.
அவர் கேப்டனாக இருந்தபோது, டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில், இந்திய ஹாக்கி அணிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. தவிர, 2013, 2018, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைகளை அவர் வென்றுள்ளார். 2014, 2023ம் ஆண்டுகளில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஹாக்கி பிரிவில், மன்பிரீத் சிங் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.