தகவல் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சி தமிழ்ப் பண்பாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒற்றைப் பண்பாட்டு மயமாக்கல் மக்களின் உணவுப் பழக்கத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கம்பு, கேழ்வரகு, சோளம், தினை, சாமை போன்ற பல்வேறு தானியங்களை பயன்படுத்தி உணவு தயாரித்த வட்டார மரபு மாறி தென்னிந்திய பண்பாடே அரிசி பண்பாடுதான் என்னும் அளவிற்கு ஒற்றைப் பண்பாடு கட்டமைக்கப்பட்டு வருகிறது. சங்க காலத்தில் ஐவகை நிலங்களில் வாழ்ந்த மக்கள் அவரவர் நிலங்களில் கிடைத்த உணவுகளையே உண்டு வாழ்ந்தனர். ஆனால் இன்று அனைவரும் அரிசியே பயன்படுத்தும் நிலை வந்துவிட்டது. ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக கிடைத்து வந்த உணவுப்பொருட்களைக் கூட காசு கொடுத்து வாங்கும் நிலை உருவாகி உள்ளது. முன்பெல்லாம் நெல் வயல்களிலும், வாய்க்கால் மடைப்பகுதிகளிலும் மீன்கள் வாழும். அவற்றைப் பிடித்து உண்பது ஏழை, எளிய மக்களின் வழக்கம். ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்தத் தொடங்கியதும் அத்தகைய மீன்கள் அழிந்தன.
அதன்பிறகு ஏரி, குளம், குட்டை, ஆறு போன்ற நீர்நிலைகளில் வாழும் மீன்களைப் பிடித்து உண்டு வந்தனர். அதுபோன்ற நீர்நிலைகளையும் இப்போது அவர்கள் பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. வணிக நோக்கோடு வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படும் மீன்களையே இப்பொழுது உண்ண வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக கிடைத்து வந்த மீன் உணவு காசு கொடுத்தால் மட்டுமே கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டது. இயற்கையில் கிடைத்து வந்த இலந்தைப்பழம், நாவல்பழம், பலாப்பழம் போன்ற கனி வகைகள் கூட தற்போது விற்பனைக்கு வரத் தொடங்கிவிட்டன. இந்த விற்பனை நகர்ப்புறங்களில் மட்டுமல்லாமல், கிராமப்புறங்களிலும்கூட நடைபெற்று வருகிறது. இத்தகைய நுகர்வு கலாச்சாரம் பரவத் தொடங்கிய பிறகு மக்களிடம் நிலவி வந்த பண்டமாற்று முறையும் குறைந்து போய்விட்டது. ஒரு மாவட்டத்தின் தாலுக்கா அளவிலேயே விவசாய விளைச்சல் மாறுபாடு அடைவதுண்டு. ஒரு பகுதியில் நெல் விளையும். மற்ற பகுதியில் கம்பு, கேழ் வரகு விளையும். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திற்கு வடக்கில் உள்ள முதனை, கோட்டேரி போன்ற கிராமங்களில் முந்திரிதான் அதிகளவில் பயிரிடப்படும். நெல் பயிரிடப்படுவதில்லை.
ஒரு சிலரே நெல் பயிரிடுவார்கள். அப்பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்கள் அங்கு விளையும் முந்திரிப்பழங்களை கூடையில் சுமந்து வந்து விருத்தாசலத்திற்கு தெற்கு பகுதியில் உள்ள மக்களிடம் கொடுத்து, அதற்கு மாற்றாக நெல் பெற்றுச் செல்வார்கள். இப்போது காசுக்கு மட்டுமே அனைத்தும் விற்கப்படுகின்றன.உணவுப் பதப்படுத்துதலில் ஏற்பட்ட மாற்றம்குறிப்பிட்ட ஒரு பருவத்தில் மிகுதியாக கிடைக்கும் உணவுப்பொருட்களை இன்னொரு பருவத்தில் உண்பதற்காக பதப்படுத்தி பாதுகாத்து வைக்கும் வழக்கம் மக்களிடம் காணப்பட்டது. எந்த நோக்கத்திற்காக உணவு பாதுகாப்பு முறை பின்பற்றப்பட்டதோ அந்த நோக்கம் இன்று முற்றிலும் வணிக மயமாகி வருகிறது.இத்தகைய வணிகர்கள் எந்திரகதியில் சென்று கொண்டிருக்கும் மக்களின் வாழ்நிலையை நன்கு புரிந்துகொண்டு செயல்படுகின்றனர். சமைப்பதற்கான நேரம், உழைப்பு ஆகியவற்றைக் குறைப்பதற்காக தொழிற்சாலைகள் மூலம் உணவுப்பொருள்கள் பதப்படுத்தப்பட்டு உடனடியாக சமைக்கும் வகையில் கடைகளில் விற்கப்படுகின்றன.அப்படி விற்கப்படும் உணவுப்பொருள்களை பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளிடமிருந்து பாதுகாப்பதற்காக பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அதுகுறித்து உணவியல் வல்லுநர்கள் பலர் குறிப்பிடுகின்றனர். உணவு பாதுகாப்பு முறைகளில் பல்வேறு வகைகள் உள்ளன. சூட்டின் உதவியோடு பாதுகாத்தல், கதிர்வீச்சு முறையில் பாதுகாத்தல், குளிர்பதன பாதுகாப்பு, உலர்த்திப் பாதுகாத்தல், வேதிப்பொருட்களால் பாதுகாத்தல், சர்க்கரை மற்றும் உப்பால் பாதுகாத்தல் ஆகிய முறைகள் நவீன முறைகளாக கருதப்படுகின்றன. இதில் வேதிப்பொருட்களை பயன்படுத்தி உணவு பொருட்களை பாதுகாக்கும் முறை மரபு சாராததும், இயற்கைக்கு முரணானதும் ஆகும். ஆனால் வணிக நோக்கோடு செயல்படும் உணவுப்பொருள் விற்பன்னர்கள் இத்தகைய முறையை அதிகம் பின்பற்றுகின்றனர். மரபுவழி உணவு பாதுகாப்பு பொருட்கள் அனைத்துமே உணவுப் பொருட்களாகவே அமைந்திருக்கும். மஞ்சள், உப்பு, எண்ணெய் போன்ற அன்றாட உணவுப் பொருட்களையே பதப்படுத்துவதற்கு பயன்படுத்துகின்றனர்.உணவுப் பதப்படுத்துதலில் மரபுவழி தொழில்நுட்பத்திற்கும், நவீன தொழில்நுட்பத்திற்கும் உள்ள வேறுபாடுகள் ஏராளம். கிராமங்களில் ஆட்டு இறைச்சியை கூறுபோட்டு விற்கும் முறை வழக்கத்தில் இருந்தது. அது வேட்டைச் சமூகத்தின் எச்சமாக பார்க்கப்பட்டது. அனைத்து கூறுகளிலும் ஆட்டின் அனைத்துப் பாகங்களும் அமைந்திருக்கும்.
நகர்ப்புறங்களில் விலைக்கு ஏற்ப ஆட்டின் உறுப்புகள் தனித்தனியாக கிடைக்கும். எலும்பில்லாத கறி, தொடைக்கறி, ரத்தம் என தனித்தனி பாகங்களாக விற்கப்படுகிற வணிகப்போக்கு இன்று கிராமங்களுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. இறைச்சிக் கடைகளில் இறைச்சியை கெடாமல் பாதுகாப்பதற்காக ஒரு சிலர் சோடியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருட்களை சேர்க்கின்றனர். இது இறைச்சியுடன் வினைபுரிந்து காஸினோ ஜெனிக் என்னும் புற்றுநோயை வரவழைக்கக்கூடிய வேதிப்பொருளை உற்பத்தி செய்கிறது. இதனால்தான் அமெரிக்கர்கள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை விடவும் நாட்டுப்புற மக்களால் மரபுவழியாக பின்பற்றப்படும், பதப்படுத்தும் முறையான உப்புக் கண்டம் போடும் முறையை சிறந்தது எனக் கூறி நமது முறையை பின்பற்றத் தொடங்கியுள்ளனர். நம் மரபுவழி உணவுப் பழக்கமே நம் மண்ணுக்கும், தட்பவெப்பத்திற்கும் ஏற்ற முறையாகும். எனவே நம் இளைஞர்களிடம் நம் மரபுவழி உணவுப்பழக்கத்தை மீண்டும் கொண்டு வருவதன் மூலம் மிகப்பெரிய மனித ஆற்றலை, மனித வளத்தை பாதுகாக்க முடியும்.
– முனைவர் ரத்தின.புகழேந்தி