மன்னார்குடி: மன்னார்குடி- திருப்பதி பாமனி விரைவு ரயிலை தினசரி இயக்கவேண்டுமென பக்தர்கள் கோரிக்கைவைத்துள்ளனர். மன்னார்குடியில் இருந்து திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி வழியாக திருப்பதிக்கு பாமணி விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மன்னார்குடியில் ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 5.10க்கு புறப்பட்டு மதியம் 3.35 மணிக்கு திருப்பதி சென்றடைகிறது. மன்னார்குடியில் இருந்து (வண்டி எண் 17408) பாமணி விரைவுரயில் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமை என வாரத்திற்கு மூன்று நாட்கள் இந்த ரயில் சேவை நடைபெறுகிறது. மறு மார்க்கத்தில் (வண்டி எண் : 17407) திருப் பதியில் இருந்து காலை 11.55 மணிக்கு புறப்பட்டு இரவு 10.15க்கு மன்னார்குடி வந்தடைகிறது. மறுமார்க்கத்தில் நடைபெறும் இந்த ரயில் சேவை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என 3 நாட்கள் நடைபெறுகிறது. திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை மற்றும் கடலூர் மாவட்ட பக்தர்கள் இந்த ரயில் சேவையை நம்பித்தான் திருப்பதி சென்று வருகிறார்கள். திருப்பதியில் தரிசனத்திற்கு பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் ஆன்லைன் முன்பதிவில் குறித்த நேரத்தில் தரிசன அனுமதி சீட்டு கிடைப்பதில்லை. தரிசனம் அனுமதி சீட்டு கிடைப்பதற்கு நேரத்திற்கு ஏற்றவாறு பயணம் திட்டமிடல் செய்யும்போது வாரத்தில் 3நாட்கள் மட்டுமே இந்த ரயில் சேவை கிடைப்பதால் சுவாமி தரிசனம் செய்ய இயலாத சூழல் ஏற்படுகிறது.
தினசரி ரயிலாக இயக்கப்படாததால் சுவாமி தரிசன சீட்டு கிடைத்தும் ரயில் போக்குவரத்து இல்லாத காரணத்தால் பயணத்தை கைவிடும் நிலை உள்ளது. புரட்டாசி மாதம் வரும் நிலையில் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். எனவே, மன்னார்குடி – திருப்பதி பாமணி விரைவு ரயிலை தற்போது வாரத்திற்கு மூன்று முறை சேவை என்பதை மாற்றி தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என மேலே குறிப்பிடப்பட்ட 5 மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து ஓய்வு பெற்ற மூத்த ரயில்வே ஊழியர் சங்க தலைவர் மன்னை மனோகரன் கூறியது: மன்னார்குடி- திருப்பதி பாமணி விரைவு ரயிலை தென் மத்திய ரயில்வே இயக்கி வருகிறது. இந்த ரயிலை இயக்க ஒரு ரயிலுக்கான பெட்டிகள் (ரேக்) பயன்படுத்தப்படுகிறது. அது வாரத்திற்கு ஒரு நாள் (சனிக்கிழமை) பராமரிப்பு திருப்பதி ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், ஒரு ரயிலுக்கான பெட்டிகளை தென் மத்திய ரயில்வே இந்த ரயிலுக்காக ஒதுக்கும் பட்சத்தில் பக்தர்களின் கோரிக்கையான தினசரி ரயிலாக இயக்குவது சாத்தியமே. இதனை தென் மத்திய ரயில்வே பரிசீலிக்க வேண்டும் என்றார்.