மஞ்சூர் : நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கெத்தை. மஞ்சூர் கோவை சாலையில் அமைந்துள்ள இப்பகுதியில் நீர்மின் நிலையம் உள்ளது. இப்பகுதியில் மின்வாரிய அலுவலர் மற்றும் ஊழியர் குடியிருப்புடன் பலதரப்பு மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கெத்தை பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே காட்டு யானைகளின் நடமாட்டம் உள்ளது.
மூன்று குட்டிகளுடன் 2 பெரிய யானைகள் ஒரு குடும்பமாக நடமாடி வருகிறது. இந்நிலையில் கெத்தை பகுதியில் இருந்து கடந்த 4 மாதங்களுக்கு முன் குட்டிகளுடன் இடம் பெயர்ந்த காட்டு யானைகள் குன்னுார் அருகே உள்ள கொலக்கம்மை, துாதுார்மட்டம், கிளன்டேல், மஞ்சக்கம்பை, மூப்பர்காடு போன்ற பகுதிகளில் நடமாடி வந்தது. நேற்று மீண்டும் இந்த யானை கூட்டம் கெத்தை பகுதிக்கு திரும்பியுள்ளது. நேற்று காலை பெரும்பள்ளம் பகுதியில் சாலையோரத்தில் காட்டு யானைகள் மேய்ச்சலில் ஈடுபட்டு கொண்டிருந்தது.
குட்டிகள் இரண்டும் வழியை மறித்தபடி நடுரோட்டில் நின்று கொண்டிருந்தது. அப்போது மஞ்சூரில் இருந்து பயணிகளுடன் சென்ற அரசு பஸ் மற்றும் தனியார் வாகனங்கள் யானைகள் ரோட்டில் நிற்பதை கண்டவுடன் தொலைவில் நிறுத்தப்பட்டது.
சுமார் அரை மணி நேரம் கடந்த நிலையில் யானைகள் குட்டிகளுடன் சாலையோரத்தில் இருந்த மண்பாதை வழியாக கீழிறங்கி வனத்துற்குள் சென்றது.
இதைத்தொடர்ந்து அரசு பஸ் மற்றும் வாகனங்கள் சம்பவ இடத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. காட்டு யானைகள் மீண்டும் திரும்பியதை தொடர்ந்து வனத்துறையின் கெத்தை, பெரும்ள்ளம் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் குறித்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் இவ்வழியாக வாகனங்களில் செல்பவர்களிடம் காட்டு யானைகளை கண்டவுடன் வாகனங்களை பாதுகாப்பான இடத்தில் நிறுத்த வேண்டும். பயணிகள் கீழே இறங்கி யானைகளை கண்டு கூச்சலிடுவது மற்றும் புகைப்படம் எடுக்க முயற்சி செய்யக்கூடாது.
காட்டு யானைகள் சாலையில் இருந்து வனப்பகுதிக்குள் சென்றதை உறுதி செய்த பின்னரே வாகனங்களை இயக்க வேண்டும் என பயணிகளுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.