மஞ்சூர் : மஞ்சூர் பஜாரில் உலா வந்த காட்டு மாட்டை கண்டு பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் சமீப காலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் மிகுதியாக உள்ளது. குறிப்பாக கரடி மற்றும் காட்டு மாடுகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. அவ்வப்போது சிறுத்தைகளும் திடீர் விஜயம் செய்து பஜார் பகுதியில் கடைகளின் முன்பு படுத்து கொண்டிருக்கும் தெருநாய்களை கொன்று தூக்கி செல்வதும் வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மஞ்சூர் பஜார் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டமும்,வாகனப் போக்குவரத்துத்தும் மிகுதியாக காணப்பட்ட வேளையில் கண்டிபிக்கை சாலையில் இருந்து வந்த ராட்சத காட்டு மாடு ஒன்று பஜாருக்குள் நுழைந்து நடை போட துவங்கியது. திடீரென காட்டு மாடு எதிரே வருவதை கண்ட பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் எதிரே வந்த வாகனங்களை பொருட்படுத்தாத காட்டு மாடு மேல்பஜார் அரசு மேல்நிலைப்பள்ளி,கடைகள், குடியிருப்பு வழியாக சாலையில் ஒய்யாரமாக நடந்து சென்று சாலையோரத்தில் இருந்த ஒற்றையடி பாதையில் இறங்கி தேயிலை தோட்டத்திற்குள் சென்றது.
பஜாருக்குள் உலா வந்த காட்டு மாடு தனது ஒரு கண் பார்வையை இழந்துள்ளது. போக்குவரத்து மிகுதியான நேரத்தில் நடுரோட்டில் ராஜநடை போட்டு நடந்து சென்ற காட்டு மாட்டை பலரும் தங்களது செல்போன்களில் படம் பிடித்தனர். இச்சம்பவத்தால் மஞ்சூர் மேல் பஜார் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.