மாஞ்சோலை எஸ்டேட் விவகாரத்தில் தமிழ்நாடு எடுத்த முடிவு சரியானதுதான்: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு ஒப்புதல்
புதுடெல்லி: திருநெல்வேலி மாவட்டம் மஞ்சோலை விவகாரத்தில் விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி மாஞ்சோலையை சேர்ந்த ஜான் கென்னடி, அமுதா, சந்திரா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து வழக்கை முன்னதாக விசாரித்த உச்ச நீதிமன்றம் ‘‘மாஞ்சோலை தொடர்பான விவகாரத்தில் ஒன்றிய அரசு என்ன விதமான நடவடிக்கை எடுக்க போகிறது. அது எந்த மாதிரியானது என்பது குறித்து எங்களுக்கு தெளிவாக தெரிவிக்க வேண்டும் என கேள்வியெழுப்பி இருந்தது.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம்நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சபரீஸ் சுப்ரமணியன், ‘‘இந்த தோட்டத்தில் வசித்த குடும்பங்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. மேலும் இந்த வனப்பகுதியை மீண்டும் மீட்டெடுக்கும் வகைலேயே இது வகைப்படுத்தப்பட்ட காடாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதையடுத்து ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘கடந்த 100 ஆண்டுகளாக இந்த வனப்பகுதி தேயிலை பயிரிட பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியை பொறுத்தவரை புலிகள் வசிக்கும் முக்கிய பகுதியோடு, பல்லுயிரி பகுதியாகும், அதேப்போன்று யானைகள் வழித்தடமும் உல்ளது. இந்த தேயிலை தோட்டத்தில் பயன்படுத்தப்படும் ரசாயன உரம் தாமிரபரணி நதியை கூட மாசுப்படுத்தும். தற்போது இந்த பகுதியை காக்கும் வகையில். தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் அனைத்தும் மிகச்சரியான ஒன்றாகும் என்று கூறினார். இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘மாஞ்சோலை தொடர்பான வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் 22ம் தேதிக்கு
ஒத்திவைத்தனர்.


