*பாளை மாநாட்டில் வலியுறுத்தல்
நெல்லை : மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என பாளையில் நடந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. பாளை லூர்துநாதன் சிலை அருகே மாஞ்சோலை தேயிலை தொழிலாளர் வாழ்வுரிமை மாநாடு நேற்றிரவு நடந்தது. மாநாட்டிற்கு மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் புருசோத்தம்மன் தலைமை வகித்தார். மாரித்துரை வரவேற்றார். கொண்டல்சாமி பேசினார். தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் ஜமால், நிர்வாகி ஜப்பார், மனித நேய ஜனநாயக கட்சி மாநில துணை செயலாளர் அலிப்பிலால் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தீர்மானங்களை அசோக்குமார் முன்மொழிந்தார். மாநாட்டில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசியதாவது: மாஞ்சோலை தேயிலை தோட்டம் குத்தகை காலம் முடிவதற்கு இன்னும் 4 ஆண்டுகள் உள்ளது. அதற்குள் சம்பந்தப்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்களை விரட்டி வருகிறது. இதனால் அவர்கள் வாழ்வாதாரத்தை தொலைத்து விட்டு நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டு எடுப்பதற்கு ஒன்றிய மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில் போராட்டங்கள் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சென்னையில் போர்டு கம்பெனி மூடும் போது பல ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். அப்போது தமிழக அரசு தலையிட்டு அவர்களுக்கு போராட்ட குழுவின் உதவியால் இழப்பீடு வாங்கி கொடுத்தது. அது போன்று தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு இழப்பீடு கிடைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையென்றால் தேயிலை தோட்டத்தை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும். இல்லையெனில் தமிழக ்அரசின் கூட்டுறவு பண்ணையின் டேன்டி கீழே நடத்த வேண்டும். தமிழக அரசு எம்எல்ஏக்கள், எம்பிக்கள் அடங்கிய குழுவை அமைத்து கருத்துருவை தமிழக முதல்வர் கேட்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் சரீப் பேசியதாவது:
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளிகள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நிலத்தை திருத்தி தேயிலை தோட்டம் அமைத்து தங்களது பிபிடிசி நிர்வாகத்திற்கு லாபத்தை ஈட்டி தந்துள்ளனர். இப்போது குத்தகை காலம் 4 ஆண்டுகள் இருக்கும் போதே தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் அது ஈடுபட்டு வருகிறது. இதனை ஒன்றிய அரசு மற்றும் தமிழக அரசு தடுத்து நிறுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டு தர வேண்டும். இல்லையென்றால் தமிழகத்திலுள்ள அனைத்து இயக்கங்கள் போராட்டங்களை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக் பேசியதாவது: மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக ரத்தம் சிந்தி உழைத்துள்ளனர். இதனை அதன் கம்பெனி மறக்க கூடாது. தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை ஒன்றிய அரசு மற்றும் தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும் மாஞ்சோலையிலுள்ள ஊத்து, நாலுமுக்கு ஆகிய இரண்டு கிராமங்களில் கடந்த 2 நாட்களாக மின்சாரம், குடிநீர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவற்றினை இன்று காலையில் சீராக்க வேண்டும். இல்லையென்றால் அதற்கு முடிவு கட்டுவதற்கு நாளை (இன்று) கலெக்டருக்கு அனைத்து கட்சியினர் மற்றும் அனைத்து இயக்கங்கள் மனு கொடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
தேவேந்திர குல மக்கள் முன்னேற்ற பேரவை தலைவர் எஸ்.ஆர்.பாண்டியன், தமிழக மக்கள் புரட்சி கழக தலைவர் அரங்க குணசேகரன், மாஞ்சோலை பகுதி மக்கள் நல சங்க செயலாளர் வக்கீல் அரசு அமல்ராஜ், ஐந்திணை மக்கள் கட்சி தலைவர் தேவதாஸ், தமஜக நிர்வாகிகள் அப்பாஸ், சாந்தி, ஜாபர், இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பு பீட்டர் உட்பட பலர் கலந்து கொண்டனர். மே 17 இயக்க முத்துக்குட்டி நன்றி கூறினார். மாநாட்டிற்கான ஏற்பாடுகளை மே 17 இயக்கத்தினர் செய்திருந்தனர்.