திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஸ்வராஜ் வெஞ்ஞாரமூடு. மிமிக்ரி கலைஞர். நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்தார். பிறகு குணச்சித்திர வேடங்களிலும், நாயகனாகவும் நடித்து வருகிறார். அண்ணன் தம்பி, மாயாவி, டிரைவிங் லைசென்ஸ் உள்பட ஏராளமான மலையாள படங்களில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் நடிகர் ஸ்வராஜ் வெஞ்ஞாரமூடு மணிப்பூர் கலவரம் தொடர்பாக தன்னுடைய பேஸ்புக்கில் சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார். ‘மணிப்பூர் கலவரம் என்னை மிகவும் பாதித்துவிட்டது. அவமானம் தாங்க முடியாமல் நான் வெட்கி தலை குனிகிறேன். இனி ஒரு நிமிடம் கூட நீதி தாமதப்பட கூடாது’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு எர்ணாகுளம் அருகே ஆலுவாவில் பீகாரை சேர்ந்த ஒரு 5 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தனக்கு போனிலும், வாட்ஸ் ஆப் மூலமும் கொலை மிரட்டல் வருவதாக நடிகர் ஸ்வராஜ் வெஞ்ஞாரமூடு கொச்சி காக்கநாடு போலீசில் புகார் செய்துள்ளார். மணிப்பூர் கலவரத்திற்கு கண்டனம் தெரிவித்த நீங்கள், ஆலுவாவில் 5 வயது சிறுமி கொல்லப்பட்டதற்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று கூறி சிலர், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.