டெல்லி: மணிப்பூர் விவகாரத்தில், மணிப்பூர் மாநில டிஜிபி நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணிப்பூரில் சட்டம், ஒழுங்கு முற்றிலும் செயலிழந்து விட்டதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகம் முற்றிலும் உருக்குலைந்துள்ளது என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநில காவல்துறை மீது நம்பிக்கை இல்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளது. மணிப்பூரில் 2 மாதங்களாக வன்முறை நீடித்து வரும் நிலையில், அம்மாநில அரசு அலட்சியமாக செயல்பட்டுள்ளது.
இந்நிலையில், மணிப்பூர் மாநில டிஜிபி ஆகஸ்ட் 7ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணிப்பூர் கலவரம் தொடர்பாக மாநில டிஜிபி நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் அணையிட்டுள்ளது. மணிப்பூர் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் டிஜிபி விளக்கம் தர வேண்டும். மணிப்பூர் டிஜிபி இத்தனை நாட்களாக என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்று தலைமை நீதிபதி அமர்வு கட்டமாக கேள்வியெழுப்பியுள்ளது. மணிப்பூரில் வன்முறை நீடிக்கும் நிலையில் 2 மாதங்களாக அரசு அலட்சியமாக செயல்பட்டுள்ளது.
அரசால் மக்களை காப்பாற்ற இயலாவிட்டால் மக்கள் எங்கு செல்வார்கள்? மணிப்பூர் அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வன்முறை தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நிலையில் மணிப்பூர் காவல்துறை இல்லை. காவல்துறையே முறையாக விசாரிக்காத நிலையில் சிபிஐ எவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்யும்? தலைமை நீதிபதி அமர்வு கேள்வியெழுப்பியுள்ளது. சிபிஐ இரண்டு எப்.ஐ.ஆர்.களை எடுத்துள்ள நிலையில் மீதமுள்ள எப்.ஐ.ஆர்.களை காவல்துறை எவ்வாறு விசாரிக்கும்? என்று கேள்வி எழுப்பப்பட்டது.