புதுடெல்லி: மணிப்பூர் வன்முறை தொடர்பாக சிபிஐ விசாரிக்கும் வழக்குகள் அனைத்தும் அசாம் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணிப்பூர் கலவர வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் நேற்று நடந்த விசாரணையின் போது, சிபிஐ விசாரித்து வரும் வழக்குகளை அசாமுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மணிப்பூர் கலவர வழக்குகளை அசாமுக்கு மாற்றுவதற்கு பல வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது மணிப்பூர் மற்றும் ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,‘‘ தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டும், அசாமில் இன்டர்நெட் வசதி சிறப்பாக உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது’’ என்றார். உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், பள்ளத்தாக்குகளில் வசிக்கும் மக்கள் மலை பகுதிகளுக்கு வருவதில் சிரமம் ஏற்படும். இது போன்ற பிரச்னைகளை தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வழக்குகளை விசாரிக்க,முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் அந்தஸ்திலான நீதித்துறை அதிகாரிகளை கவுகாத்தி உயர்நீதிமன்றம் நியமிக்க வேண்டும்.
குற்றவாளிகளை ஆஜர்படுத்துதல்,தடுப்பு காவல்,நீதிமன்ற காவல் நீட்டிப்பு தொடர்பான நீதித்துறை நடைமுறைகள் கவுகாத்தியில் உள்ள நீதிமன்றத்தில் ஆன்லைனில் நடத்தப்படும். பாதிக்கப்பட்டவர்கள்,சாட்சிகள் ஆகியோர் நீதிமன்றத்துக்கு நேரில் வந்தும் வாக்குமூலம் அளிக்கலாம் என கூறியுள்ளது. மணிப்பூரில் துப்பாக்கிகள் பறிமுதல்: மணிப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் போலீசார் நடத்திய சோதனையில் வெடிமருந்து, துப்பாக்கிகள் மற்றும் 8 குண்டுகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.