இம்பால்: மணிப்பூருக்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வந்த 100 லாரிகளை மக்கள் தடுத்து நிறுத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூரில் கடந்த ஆண்டு மெய்டீ மற்றும் குக்கி மக்களுக்கு இடையேயான இன மோதல்களில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடு, உடமைகளை இழந்தனர். கடந்த சில மாதங்களாக அமைதி நிலவி வந்த நிலையில் கடந்த 6ம் தேதி ஜிரிபாம் மாவட்டத்தில் 59 வயதான ஆண் கொலை செய்யப்பட்டார்.இதையடுத்து நடந்த வன்முறையில் 100 வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதில் ஒருவர் உயிரிழந்தார்.ஜிரிபாம் வன்முறையை கண்டித்து கடந்த 13ம் தேதி முதல் காலவரையற்ற முற்றுகை போராட்டத்துக்கு குக்கி ஸோ மக்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்நிலையில், ஜிரிபாமில் இருந்து இம்பாலுக்கு அத்தியாவசிய பொருட்களை 100 லாரிகள் நேற்று சென்றன. இந்த லாரிகளுக்கு ஒன்றிய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் பாதுகாப்பு அளித்தனர்.டமேங்க்லாங்க் மாவட்டத்தில் உள்ள டட்பங் என்ற இடத்தில் சென்ற லாரிகளை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். கடந்த ஆண்டு மணிப்பூரில் உள்ள பல பகுதிகள் கலவரத்தால் பாதிக்கப்பட்டன.ஆனால்,ஜிரிபாமில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. ஜிரிபாமில், மெய்டீ,குக்கி,நாகா,முஸ்லிம்கள் மற்றும் மணிப்பூர் அல்லாதவர்களும் வசிக்கின்றனர். இந்த சம்பவத்தால் ஜிரிபாமில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.