தண்டையார்பேட்டை: மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், ஒன்றிய அரசை கண்டித்தும் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியினர் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதையும் மீறி கொருக்குப்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் 100 பேர் கைது செய்யப்பட்டனர். மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து டிஒய்எப்ஐ அமைப்பு சார்பில் ஏராளமானோர்,
கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்த இன்று ஊர்வலமாக வந்தனர்.
இதற்கு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு மாநில கவுரவ தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.கே.மகேந்திரன் தலைமை வகித்தார். டிஒய்எப்ஐ மாவட்ட செயலாளர் சரவணன் தமிழன் முன்னிலையில், பகுதி செயலாளர் விமலா மற்றும் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கண்டன கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கொருக்குப்பேட்டை போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். அதையும் மீறி கொருக்குப்பேட்டை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது, ஒன்றிய அரசை கண்டித்தும், மணிப்பூரில் பெண்களின் நிர்வாண ஊர்வலம் நடத்தியவர்களை கைது செய்ய கோரியும் கோஷங்களை எழுப்பினர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்லாததால், போலீசார் கைது செய்தனர். பின்னர் நூற்றுக்கும் மேற்பட்டோரை பேருந்தில் ஏற்றி அதே பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.