புதுடெல்லி: மணிப்பூரில் சமீபத்தில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பான மூன்று முக்கிய வழக்குகளை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நடத்த ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. மணிப்பூரில் தொடரும் வன்முறை மற்றும் அதன் பின்னால் இருக்கும் சதியைக் கண்டுபிடிப்பதற்கும், குற்றங்களின் தீவிரத்தை கருத்தில் கொண்டு விசாரணைகளை என்ஐஏவிடம், மேற்கண்ட வழக்குகள் ஒப்படைப்பதாக உள்துறை அமைச்சகம் அறிவித்தது. இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், ‘கடந்த 11ம் தேதி போரோபெக்ராவில் வீடுகள் எரிக்கப்பட்டன; பொதுமக்கள் 2 பேர் கொல்லப்பட்டனர்.
பின்னர் அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் உட்பட 6 பேரை கடத்தி கொலை செய்தனர். அதன்பின் அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய போராளிகள் சிலர் போரோபெக்ரா காவல் நிலையத்தையும், ஜாகுராதோர் கரோங்கில் அமைந்துள்ள சில வீடுகளையும் தாக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 2 பேர் பலியாகினர். மேலும் ஜிரிப்ராமில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார். ஜிரிபாமைச் சேர்ந்த 31 வயது பெண், தீவிரவாத கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்.
மேற்கண்ட வழக்குகள் தொடர்பாக என்ஐஏ விசாரணையை தொடங்கியுள்ளது. உள்ளூர் காவல்துறையிடமிருந்து வழக்கு ஆவணங்கள் என்ஐஏவிடம் ஒப்படைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. ஜிரிபாமில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக 2 வழக்குகளை என்ஐஏ பதிவு செய்துள்ளது. குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றன.
ராணுவ முகாமில் வேலை செய்தவர் மாயம்;
மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் அளித்த பேட்டியில், ‘சமீபத்திய நடந்த வன்முறை சம்பவங்களுக்கு காரணமானவர்களைப் பிடிக்க ஜிரிபாம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் தேடுதல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. குற்றவாளிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கும் வரை தேடுதல் வேட்டை தொடரும். ஆறு காவல் நிலைய எல்லைகளில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெற ஒன்றிய அரசிடம் வலியுறுத்துவோம். ஜிரிபாம் சம்பவங்கள் தொடர்பான 3 வழக்குகளை என்ஐஏ எடுத்து விசாரிக்கும் நிலையில், லோய்டாங் குனோவில் காணாமல் போன நபரை போலீசார் தேடி வருகின்றனர். ராணுவ முகாமில் வேலை செய்து வந்தவர் மாயமானதால், அவரை தேடும் பணி நடக்கிறது’ என்றார்.