திருப்பரங்குன்றம்: மணிப்பூர் பிரச்னையை மக்கள் தான் சரி செய்ய வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்து உள்ளார். ராமேஸ்வரத்தில் இன்று துவங்க உள்ள பாஜ பாதயாத்திரை விழாவில் பங்கேற்க, பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று மதுரை வந்தார். விமானநிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: என்எல்சியால் விளைநிலங்கள் அழிக்கப்படுகிறது. நெல் அறுவடை செய்யக்கூடிய நிலத்தில் ஜேசிபி இயந்திரத்தை விட்டு நிலத்தை கையகப்படுத்துவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. என்எல்சி நிறுவன தலைவருக்கு இதுகுறித்து தொலைபேசியில் பேசி, நான் என் கண்டனத்தையும் பதிவு செய்தேன். கேந்திர வித்யாலயா பள்ளி பெயர் பலகையில் தமிழ் புறக்கணிக்கப்படுவதாக கூறுகிறீர்கள்.
இந்த மாதிரி தவறு இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று கேந்திர வித்யாலயா சேர்மனுக்கு உடனே கடிதம் எழுதுகிறேன். மணிப்பூர் பிரச்னையை மக்கள் தான் சரி செய்ய வேண்டும். அரசு அவர்களுக்கு துணையாக இருக்கும். இது குறித்து பாராளுமன்றத்தில் பேச உள்துறை அமைச்சர் தயாராக உள்ளார். பாதயாத்திரையில் பங்கேற்க கூட்டணி கட்சியினர் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு உடல்நலமில்லை. ஆகவே, அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அவர் இனி வரும் நாட்களில், ஏதாவது ஒரு இடத்தில் பங்கேற்பார்’’ என்றார்.