புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தன் எக்ஸ் பதிவில், “மணிப்பூர் வன்முறையில் மூழ்கி 16 மாதங்களாகி விட்டது. ஆனால் பாஜவின் இரட்டை இன்ஜின் அரசு மணிப்பூரில் அமைதி மற்றும் இயல்பு நிலையை உறுதிப்படுத்த, அங்குள்ள அனைத்து சமூக மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மணிப்பூர் மக்களை காக்க மோடி அரசு தவறி விட்டது.
பிரதமர் மோடி இன்னும் ஏன் மணிப்பூருக்கு செல்லவில்லை. மணிப்பூருக்கு போக நீங்கள் பயப்படுவது ஏன்? உங்கள் ஈகோவால்தான் மணிப்பூரின் அனைத்து சமூக மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். உங்கள் அரசாங்கத்தின் தகுதியின்மை மற்றும் வெட்கமின்மையால் மணிப்பூரில் அமைதியை கொண்டு வர சமாதான நடவடிக்கையை கூட உங்களால் எடுக்க முடியவில்லை” என பிரதமர் மோடிக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி விமர்சித்து உள்ளார்.