இம்பால்: மணிப்பூர் சர்வதேச எல்லையில் எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை ராணுவு தளபதி உபேந்திர திவேதி நேற்று ஆய்வு செய்தார். பாஜ ஆட்சி செய்யும் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த ஆண்டு மெய்டீஸ், குக்கி, நாகா சமூகத்தினரிடைய நடந்த மோதலில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஓராண்டை கடந்த பிறகும் அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் ராணுவ தளபதி உபேந்திர திவேதி இரண்டுநாள் பயணமாக மணிப்பூர் சென்றுள்ளார்.
நேற்று முன்தினம் மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங்கை ராணுவ தளபதி உபேந்திர திவேதி சந்தித்து பேசினார். அப்போது மணிப்பூரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினர். இரண்டாம் நாளான நேற்று மணிப்பூரின் சர்வதேச எல்லையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது பணியில் இருந்த வீரர்களுடன் கலந்துரையாடிய உபேந்திர திவேதி, தேசத்தை கட்டி எழுப்ப பாடுபடும் வீரர்களின் விலை மதிப்பற்ற அர்ப்பணிப்பை பாராட்டினார்.