இம்பால்: மணிப்பூரில் கடந்த ஆண்டு மெய்டீஸ், குக்கி, நாகா சமூகத்தினரிடைய நடந்த மோதலில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஓராண்டை கடந்த பிறகும் அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. நேற்று முன்தினம் பாஜ செய்தி தொடர்பாளர் மைக்கேல் லாம்ஜாத்தங்கின் வீட்டுக்குள் புகுந்த கும்பல் வீட்டிலிருந்த பொருட்களை உடைத்து, சேதப்படுத்தியதுடன், வீட்டையும், காரையும் தீ வைத்து எரித்தனர்.
இந்நிலையில் நேற்றும் வன்முறை சம்பவம் அரங்கேறி உள்ளது. மேற்கு இம்பால் மாவட்டத்தில் உள்ள ஒரு மலை உச்சியில் இருந்து குட்ரூக், கடங்பந் பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை எறிந்தும் அராஜகத்தில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் நங்பாம் சுர்பலா தேவி(31) என்ற பெண் பலியானார். அவரது 8 வயது மகள், காவல்துறை அதிகாரி உள்பட 4 பேர் காயமடைந்தனர்.